

சென்னை,
அரசின் முதன்மை செயலாளர் கே.கோபால் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த மார்ச் மாதம் 20-ந்தேதி சட்டசபையில் 110 விதியின் கீழ் தேனி மாவட்டத்தில் புதிய மருத்துவக்கல்லூரி நிறுவப்படும் என்று அறிவித்தார்.
சென்னை, நாமக்கல், ஒரத்தநாடு, நெல்லையை தொடர்ந்து சேலம் தலைவாசல் கூட்டு ரோட்டில் 5-வது கால்நடை மருத்துவக்கல்லூரி நிறுவப்பட்டது. அதன்தொடர்ச்சியாக தற்போது தேனி மாவட்டம் வீரபாண்டி கிராமத்தில் இந்த புதிய கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைய இருக்கிறது.
238 ஏக்கரில் ரூ.265 கோடியே 87 லட்சம் மதிப்பில் இந்த மருத்துவக்கல்லூரி நிறுவப்பட இருக்கிறது. அரசு தீவிரமாக பரிசீலித்த பிறகு நிர்வாக அனுமதிக்காக ரூ.94 கோடியே 72 லட்சத்து 68 ஆயிரத்தை வழங்க முடிவு செய்துள்ளது.
மேலும் இந்த கல்லூரியில் 80 மாணவர்களுக்கு படிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். இந்த மருத்துவக்கல்லூரியில் 2021-22-ம் ஆண்டில் இருந்து கல்வியாண்டு தொடங்கும். அந்த கல்வியாண்டில் முதலில் 40 பேரும், அதன்பின்னர் 80 பேரும் சேர்க்கப்படுவார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.