

சென்னை,
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் சார்பில் இதுவரை சென்னை, திருவள்ளூர், கோயம்புத்தூர், செங்கல்பட்டு, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், வேலூர், சேலம், விழுப்புரம், திருநெல்வேலி, பெரம்பலூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய 15 மாவட்டங்களில் 1,900 பணிபுரியும் மகளிர் பயனடைந்து வரும் வகையில் தமிழ்நாடு முதல்-அமைச்சரால் 19 தோழி விடுதிகள், திறந்து வைக்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, பிற மாவட்டங்களில் பணிபுரியும் மகளிர் விடுதிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு, 21.05.2025 அன்று 13 மாவட்டங்களில் 14 விடுதிகளும், 13.11.2025 அன்று மேலும் 12 மாவட்டங்களில் 12 விடுதிகளும் சேர்த்து, மொத்தம் 26 விடுதிகள் 239 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2740 மகளிர் பயன்பெறும் வகையில் புதிய தோழி விடுதிகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டுமான பணிகள் தற்போது முழுவீச்சில் நடைப்பெற்று வருகின்றன.
இவ்விடுதிகளில் பயோமெட்ரிக் உள் நுழைவு, 24x7 பாதுகாப்பு வசதி, Wi-Fi வசதி, சி.சி.டி.வி. வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஆரோக்கியமான உணவு, பகல் நேர குழந்தைகள் பராமரிப்பு வசதி, சுடுநீர் வசதி, சலவை இயந்திரம், இஸ்திரி வசதி, வாகன நிறுத்துமிடம் மற்றும் பொழுதுபோக்கு அறை போன்ற வசதிகள், குறைந்த வாடகையில் வழங்கப்பட்டு வருகின்றன. மகளிரின் பாதுகாப்பான, வசதியான தங்குமிடங்கள் தேவைகளை கருத்தில் கொண்டு, பணிபுரியும் பெண்கள் மட்டுமல்லாது பயிற்சி, உயர்கல்வி, நேர்காணல் போன்ற தேவைகளுக்காக நகரங்களுக்கு இடம் பெயரும் அனைத்து மகளிரின் தேவைகளையும் கருத்தில் கொண்டு குறுகிய கால தங்கும் வசதியையும் பயன்படுத்தி கொள்ளும் வகையில் இவ்விடுதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பணிபுரியும் மகளிர் விடுதிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு தற்போது மதுரை, தருமபுரி, கடலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் 21 கோடியே 2 லட்சம் ரூபாய் செலவில், 200 மகளிர் தங்கும் வகையில், புதிதாக கட்டப்பட்டுள்ள பணிபுரியும் மகளிருக்கான 4 விடுதி கட்டிடங்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், தலைமை செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை முதன்மைச்செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், இ.ஆ.ப., தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஷரண்யா, இ.ஆ.ப., மற்றும் முதன்மை செயல் அலுவலர் பவன் கைபா ஆகியோர் கலந்து கொண்டனர்.