குமரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி இல்லை - கலெக்டர் அறிவிப்பு

குமரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி இல்லை என கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி இல்லை - கலெக்டர் அறிவிப்பு
Published on

நாகர்கோவில்,

2020-ம் ஆண்டு நிறைவடைந்து 2021-ம் ஆண்டு இன்னும் சில தினங்களில் பிறக்க உள்ளது. பொதுவாக குமரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டும். இந்நிலையில் குமரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி இல்லை என மாவட்ட கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி கடற்கரை உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தளங்களில் கூடி புத்தாண்டை வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. குமரியில் தற்போது கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்த நிலையில் புத்தாண்டையொட்டி கன்னியாகுமரிக்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தால், கொரோனா தொற்று மீண்டும் பரவக்கூடும். வெளிநாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் தலைதூக்கி உள்ளது.

எனவே பொதுமக்களின் நலன் கருதி வருகிற 31-ந்தேதி இரவு உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் போன்றவைகள் வழக்கம் போல் செயல்படும். எனினும் அதில் நடத்தப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை.

மேலும் 31-ந்தேதி மற்றும் ஜனவரி 1-ந்தேதி ஆகிய 2 நாட்களும் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல அனுமதி இல்லை. மேலும் அரசு அறிவுறுத்தும் நோய் தடுப்பு விதிகளை பொதுமக்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கலெக்டர் அரவிந்த் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com