

கன்னியாகுமரி,
குமரி மாவட்டத்தில் 113 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இதில் 53 மதுக்கடைகளில் பார் வசதி உண்டு. மாவட்டம் முழுவதும் உள்ள மதுக்கடைகளில் நாள் ஒன்றுக்கு ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை மது விற்று தீர்கின்றன. அதுவே பண்டிகை நாட்கள் எனில் கூடுதல் வருவாய் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு கிடைக்கும். பெங்கல், தீபாவளி, புத்தாண்டு ஆகிய பண்டிகை நாட்களில் ரூ.4 கோடி முதல் ரூ.10 கோடி வரை மதுபானங்கள் விற்பனை செய்யப்படும்.
புத்தாண்டு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பிறந்தது. புத்தாண்டை கொண்டாடும் விதமாக மதுபிரியர்கள் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுத்தனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபிரியர்களின் கூட்டம் அலைகடலாக காட்சி அளித்தது. பலமணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்கள் மற்றும் பீர் வகைகளை வாங்கிச் சென்றனர்.
நேற்று முன்தினம் மது விற்பனை படுஜோராக இருந்தது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரத்தில் மது விற்பனை தீவிரமாக இருந்தது. அந்த வகையில் நேற்று முன்தினம் ஓரே நாளில் ரூ.4 கோடி 7 லட்சத்துக்கு மது விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டை விட ரூ.32 லட்சம் கூடுதலாக மது விற்பனை ஆகி உள்ளது. இந்த தகவலை டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.