காதலனை மறக்க முடியாமல் மனைவி தவித்ததால் புதுமாப்பிள்ளை தற்கொலை - திருமணமான 3 வாரத்தில் சோகம்

காதலனை மறக்க முடியாமல் மனைவி தவித்ததால் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சிவகாசி,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஒரு ஊரைச் சேர்ந்த 25 வயது வாலிபருக்கும், சாத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும் 3 வாரங்களுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. ஆனால் புதுமாப்பிள்ளை மிகவும் சோகமாக இருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அவருடைய தாயார், ஏன் சோகமாக இருக்கிறாய்? என்று கேட்டுள்ளார்.

அதற்கு அவர், "எனக்கு நீங்கள் திருமணம் செய்து வைத்த பெண் ஏற்கனவே ஒரு வாலிபரை காதலித்துள்ளார். அவரைத்தான் திருமணம் செய்ய நினைத்து இருந்தார். இந்த நிலையில் நீங்கள் அந்த பெண்ணை எனக்கு திருமணம் செய்து வைத்தீர்கள். அவள் தனது காதலனை மறக்க முடியாமல் தவித்து வருகிறார். என்னுடன் அந்த பெண் சேர்ந்து சந்தோஷமாக வாழ முடியாது" என்று கூறி வருத்தப்பட்டுள்ளார். ஆனால், புதுமாப்பிள்ளையின் தாய் அவரை சமாதானம் செய்து, இன்னும் சில நாட்களில் எல்லாம் சரியாகிவிடும் எனக்கூறி இருக்கிறார்.

சம்பவத்தன்று படுக்கை அறையில் இருந்து புதுமாப்பிள்ளை எழுந்து வரவில்லை. வீட்டில் உள்ளவர்கள் அழைத்தபோதும் உள்ளே இருந்து அவர் சத்தம் கொடுக்கவில்லை. எனவே ஜன்னல் வழியாக பார்த்தபோது, வீட்டில் மின்விசிறியில் புதுமாப்பிள்ளை தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார். உடனே அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர் பரிசோதனை செய்தபோது, ஏற்கனவே அவர் இறந்துவிட்டது தெரியவந்தது.

தனது மகன் தற்கொலை குறித்து புதுமாப்பிள்ளையின் தாய் திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com