ஏசி கேட்டு வரதட்சணை கொடுமை.. திருமணமான 4-வது நாளில் புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு


ஏசி கேட்டு வரதட்சணை கொடுமை.. திருமணமான 4-வது நாளில் புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு
x
தினத்தந்தி 1 July 2025 1:41 PM IST (Updated: 1 July 2025 5:00 PM IST)
t-max-icont-min-icon

மறுவீட்டிற்காக லோகேஸ்வரி தனது கணவர் பன்னீருடன் தாய் வீட்டிற்கு வந்தார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த முஸ்லிம் நகர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் லோகேஸ்வரி (22) பி.ஏ.பட்டதாரியான இவருக்கும் பொன்னேரி அடுத்த காட்டாவூர் பகுதியைச் சேர்ந்த பன்னீர் என்பவருக்கும் (30) கடந்த மாதம் 27-ம் தேதி திருமணம் நடந்தது.

இதையடுத்து மறுவீட்டிற்காக லோகேஸ்வரி தனது கணவர் பன்னீருடன் முஸ்லிம் நகர் ஏரிக்கரையில் உள்ள தாய் வீட்டிற்கு நேற்று மாலை வந்தார். இரவில் புதுதம்பதிக்கு விருந்து உணவு பரிமாறப்பட்டது. பின்னர் அனைவரும் தூங்கச் சென்றனர். இதனை தொடர்ந்து புதுப்பெண் லோகேஸ்வரி கழிவறைக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் லோகேஸ்வரி வராததை கவனித்த அவரது தந்தை கஜேந்திரன் கதவை தட்டி பார்த்தார்.

கழிவறை உள்ளே இருந்து லோகேஸ்வரி எந்தவித பதிலும் அளிக்காததால், பதறிபோன கஜேந்திரன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது மகள் லோகேஷ்வரி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறினார். கஜேந்திரனின் சத்தத்தை கேட்டு எழுந்த குடும்பத்தினர் லோகேஸ்வரியை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் லேகேஸ்வரி இறந்து விட்டதாக தெரிவித்தனர.

இது குறித்து லோகேஸ்வரின் தந்தை கஜேந்திரன் பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், எனது மகளுக்கும் காட்டாவூரை சேர்ந்த பன்னீர் என்பவருக்கும் கடந்த 27ஆம் தேதி திருமணம் நடந்தது. 4 சவரன் நகை, பைக், ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பில் வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி கொடுத்தோம். திருமணம் முடித்த நாளிலிருந்து வரதட்சணை கேட்டு எனது மகளை துன்புறுத்தியுள்ளனர். எனது மகளின் செல்போனை பறித்து வைத்துள்ளனர். மேலும் மீதம் தரவேண்டிய ஒரு சவரன் நகை, ஏ.சி., வீட்டிற்கு தேவையான பொருட்களை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர். நேற்று இரவும் இதுகுறித்து எனது மகளிடம், பன்னீர் கேட்டு சண்டையிட்டார். இருவரையும் சமாதானம் செய்தோம். எனது மகளின் சாவுக்கு பன்னீர் மற்றும் அவரது குடுபத்தினர் தான் காரணம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பன்னீர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் முடிந்த 4-வது நாளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story