திமுக ஆட்சிக்கு வந்த பின் அம்மா உணவகம் சரியாக செயல்படவில்லை: எடப்பாடி பழனிசாமி

அம்மா உணவகத்தின் மீது அக்கறை இருந்தால் கடந்த மூன்று ஆண்டு காலத்தில் ஆட்சியாளர்கள் ஆய்வு செய்திருக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
திமுக ஆட்சிக்கு வந்த பின் அம்மா உணவகம் சரியாக செயல்படவில்லை: எடப்பாடி பழனிசாமி
Published on

சேலம்,

சேலம் ஓமலூரில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஏழை, எளிய தொழிலாளர்கள் குறைந்த விலையில் சுவையான உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக அம்மா உணவகம் தமிழ்நாடு முழுவதும் மலிவு விலையில் உணவு வழங்கி வருகிறது. அப்படிப்பட்ட அம்மா உணவகம் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சரியான முறையில் செயல்படவில்லை.

சென்னையில் 47 மையம் செயல்பட்டு வந்தது திமுக பொறுப்பேற்ற பிறகு 19 அம்மா உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. தி.மு.க. ஆட்சி ஏற்பட்ட பிறகு அம்மா உணவகத்தை சரியான முறையில் நிர்வகிக்கவில்லை. அம்மா உணவகத்தின் மீது அக்கறை இருந்தால் கடந்த மூன்று ஆண்டு காலத்தில் ஆட்சியாளர்கள் ஆய்வு செய்திருக்க வேண்டும். இந்த திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டு தற்போது இந்த ஆய்வு நடைபெற்று இருக்கிறது.

அம்மா உணவகத்தின் மீது அரசு கவனம் செலுத்தாத காரணத்தினால் ஏழை எளிய மக்கள் சரியான உணவு கிடைக்காததால் இந்த ஆட்சியாளர்கள் மீது ஏழை எளிய தொழிலாளர்கள் வெறுப்பில் உள்ளனர். இதனை அறிந்த பிறகு தமிழக முதல்-அமைச்சர் இந்த ஆய்வை நடத்தியுள்ளார். தி.மு.க. குடும்பக் கட்சியாக ஆட்சியும் நடத்தி வருகிறது. துணை முதல்-அமைச்சர் பதவி ஸ்டாலினின் மகனுக்கு வழங்குவது ஏற்புடையதல்ல.தி.மு.க.வில் எத்தனையோ மூத்த முன்னோடிகள் உள்ளனர். அவர்களுக்கு ஏன் துணை முதல்-அமைச்சர் பதவி வழங்க முன்வரக்கூடாது. தி.மு.க. அரசு இதுவரை மூன்று லட்சத்து 65 ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ளது. தமிழக அரசு கடனில் தான் செயல்பட்டு வருகிறது" இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com