தக்காளி விலை திடீர் உயர்வு.! இல்லத்தரசிகள் அதிர்ச்சி

வரத்து குறைந்து தேவை அதிகரித்ததால் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
திருப்பூர்,
சமையலில் தக்காளிக்கு எப்போதும் சிறப்பிடம் உண்டு. குறைந்த விலையில் கிடைக்கும் அதிக சத்துக்கள் கொண்ட பழமாக இருப்பதால் ஏழைகளின் ஆப்பிள் என்று தக்காளியை குறிப்பிடுவார்கள். ஆனால் தக்காளியின் விலை தற்போது ஆப்பிளுக்கு இணையாக உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தற்போது திருப்பூர் மற்றும் தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தக்காளில் விலை வேகமாக அதிகரித்து வருகிறது. சில்லறை விற்பனையில் தரத்திற்கு ஏற்ப ஒரு கிலோ தக்காளி ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரத்தில் பனிப்பொழிவால் மகசூல் குறைந்துள்ளதால், விலை உயர்ந்தும் தங்களுக்கு பலனில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது;
கரும்பு, வாழை போன்ற பணப்பயிருக்கு மாற்றாக பலரும் காய்கறிகள் சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக தக்காளிக்கு தேவை அதிகமாக இருப்பதால் ஏராளமான விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். ஆனாலும் பல நேரங்களில் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத நிலையே உள்ளது. சுமார் 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.1,000 வரை விற்பனையாகிறது. ஒருசில நாட்கள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்தாலும் தரமான தக்காளி விலை கடந்த சில நாட்களாகவே ஒரு பெட்டி ரூ.800-க்கு குறையாமல் உள்ளது. தக்காளி வரத்து குறைந்து காணப்படுவதே இதற்கு காரணமாகும்.
கார்த்திகை மாத தொடக்கத்திலேயே தொடங்கி தற்போது தீவிரமடைந்துள்ள பனிப்பொழிவு காரணமாக தக்காளி விளைச்சல் பெருமளவு குறைந்துள்ளது. வழக்கமாக கிடைக்கும் மகசூலில் பாதிக்கும் குறைவாகவே விளைச்சல் உள்ளது. எனவே இந்த விலை உயர்வின் பலன் விவசாயிகளை சென்றடையவில்லை என்பதே உண்மை நிலவரமாகும். அதேநேரத்தில் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. வெளியூர் வியாபாரிகள் உடுமலை சந்தைக்கு அதிக அளவில் வந்து கொள்முதலை தொடங்கினால், விலை மேலும் உயரவும் வாய்ப்பு உள்ளது. எல்லா சீசனிலும் தக்காளிக்கு சீரான விலை கிடைக்கும் வகையிலான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்'என்று விவசாயிகள் கூறினர்.






