

சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடும், பிற உரிமைகளும் இன்னும் வழங்கப்படாத நிலையில், புதிதாக நிலங்களை பறிக்க அந்த நிறுவனம் துடிப்பதும், அதற்கு தமிழக ஆட்சியாளர்கள் துணைபோவதும் கண்டிக்கத்தக்கவை.
மூன்றாவது சுரங்கத்திற்காக 20 கி.மீ சுற்றளவில் 12,125 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், அதனால் அப்பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் மிக மோசமானதாக இருக்கும். வளமான நிலங்களை அடிமாட்டு விலைக்கு கையகப்படுத்த என்.எல்.சி.யும், தமிழக அரசும் துடிப்பது மிகப்பெரிய துரோகமாகும்.
அதுமட்டுமின்றி, கையகப்படுத்தப்படும் நிலங்களில் மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக மணிமுத்தா, வெள்ளாறு ஆகிய ஆறுகளை விருத்தாசலத்திற்கு முன்பாக இணைக்கவும் அரசு திட்டமிட்டிருக்கிறது. ஆறுகளை அவற்றின் இயற்கையான பாதையிலிருந்து செயற்கையாகத் திருப்பினால், மழைக்காலங்களில் வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரழிவுகள் ஏற்படும். இது ஒட்டுமொத்த மாவட்டத்திற்கும் ஆபத்தாகும்.
எனவே, யாருக்கும் தேவையில்லாத, இயற்கைக்கு எதிரான மூன்றாவது நிலக்கரி சுரங்கத் திட்டத்தை அரசும் என்.எல்.சி.யும் கைவிட வேண்டும். அதையும் மீறி மக்களின் நிலங்களைக் கையகப்படுத்த என்.எல்.சி. நிர்வாகமும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் முயன்றால், அதற்கு எதிராக நானே நேரடியாக களமிறங்கி மக்களைத் திரட்டி போராடுவேன். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.