

சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையும், ஞாயிற்றுகிழமைகளிலும் ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. இதனால் 24 மணி நேரம் செயல்படும் தொழிற்சாலைகள், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் பணியும் மட்டுமே நடைபெற விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரவு நேரங்களில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பஸ்களுக்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால் இரவு நேரம் மட்டும் செல்படும் பல்வேறு பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் விரைவில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்ற அச்சமும் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்துக்கு வெளிமாநிலங்களில் இருந்து வந்த வடமாநில தொழிலாளர்கள் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்வதில் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் பல வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர் செல்ல தொடங்கி விட்டனர். இதனால் ரெயில் நிலையங்களில் வடமாநில தொழிலாளார்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நேற்று வடமாநில தொழிலாளர்கள் பலர் தங்களது சொந்த ஊர் செல்ல குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முறையாக முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் கொண்டவர்களை மட்டுமே ரெயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் காத்திருப்போர் பட்டியலில் உள்ள டிக்கெட் கொண்ட வடமாநில தொழிலாளர்கள் அனைவரும் ரெயில் நிலைய வளாகத்தில் ஆங்காங்கே கூடி இருந்தனர். அவர்களை ரெயில்வே பாதுகாப்பு படையினர் கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.