

சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 3,11,285 தெருமின்விளக்குகள் 100% ஒளிர்வதை உறுதிசெய்யும் வகையில் நேற்று (15.06.2026) இரவு மாநகராட்சி அலுவலர்கள் மூலமாக களஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் எரியாத 1,817 தெருமின்விளக்குகள் கண்டறியப்பட்டு, அவற்றை உடனடியாக ஒளிர செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், தகவல் தெரிவித்தாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள், தெருக்கள், மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புப் பகுதிகள், மயானபூமிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மின்விளக்குகளும், உயர்கோபுர மின்விளக்குகளும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் அமைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 3,11,285 மின்விளக்குகள் அனைத்தும் 100% ஒளிர்வதை உறுதி செய்திடும் வகையில், அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொள்ள மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி. எஸ். சமீரன், உத்தரவிடப்பட்டது.
மாநகராட்சி ஆணையர் உத்தரவின்படி, வடக்கு வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் இணை ஆணையாளர் (கல்வி), மத்திய வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் இணை ஆணையாளர் (சுகாதாரம்), தெற்கு வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் இணை ஆணையாளர் (பணிகள்) ஆகியோர் வட்டார பொறுப்பு அலுவலர்களும், 1 முதல் 15 மண்டலங்களுக்கும் பொறுப்பு அலுவலர்களாக உயர் அலுவலர்களும் நியமிக்கப்பட்டு நேற்று (15.06.2026) இரவு முழுவதும் 100 சதவீதம் களஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த களஆய்வில் மொத்தமுள்ள 3,11,285 தெருமின்விளக்குகளில் 1,817 தெருமின்விளக்குகள் எரியாமல் இருப்பது கண்டறியப்பட்டது.
அவற்றின் விவரம்
வ. எண் மண்டலங்கள் மின்விளக்குகள் எண்ணிக்கை ஒளிராத மின்விளக்குகள் எண்ணிக்கை
1 திருவொற்றியூர் 14,405 114
2 மணலி 13,115 98
3 மாதவரம் 20,603 191
4 தண்டையார்பேட்டை 20,537 117
5 இராயபுரம் 15,948 121
6 திரு.வி.க.நகர் 19,580 91
7 அம்பத்தூர் 30,268 249
8 அண்ணாநகர் 22,118 71
9 தேனாம்பேட்டை 23,059 172
10 கோடம்பாக்கம் 24,271 175
11 வளசரவாக்கம் 21,647 6
12 ஆலந்தூர் 15,924 64
13 அடையாறு 25,197 156
14 பெருங்குடி 24,057 77
15 சோழிங்கநல்லூர் 20,556 115
3,11,285 1,817
எரியாத இந்த 1,817 மின்விளக்குகளில் பழுதான 1,090 மின்விளக்குகளை 24 மணிநேரத்திற்குள் சரிசெய்து ஒளிர செய்திடவும், புதை மின்வட பழுது காரணமாக எரியாத 700 மின்விளக்குகளை 48 மணிநேரத்திற்குள் புதை மின்வட பழுதினை சரி செய்து ஒளிர வைத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், 27 இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறுவதன் காரணமாக அகற்றப்பட்ட தெருமின்விளக்கு கம்பங்கள் மழைநீர் வடிகால் பணிகள் முடிந்தவுடன் மீண்டும் அமைத்து மின்விளக்குகள் பொருத்தி ஒளிர செய்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மின்விளக்குகள் அனைத்தும் ஒளிர்வதை தொடர்ந்து கண்காணித்து அனைத்து மின்விளக்குகளும் நூறு சதவீதம் ஒளிர்வதை உறுதி செய்திட மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிடப்பட்டுள்ளது.
மாநகராட்சி பகுதிகளில் உள்ள ஒளிராத மின்விளக்குகள் தொடர்பாக பொதுமக்கள் மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட தகவலை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி. எஸ். சமீரன், தெரிவித்துள்ளார்.