“டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சலுக்கு நிலவேம்பு குடிநீர்..” - வெளியான முக்கிய அறிவிப்பு

அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களிடம் உரிய ஆலோசனைகளை பெற்று பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
“டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சலுக்கு நிலவேம்பு குடிநீர்..” - வெளியான முக்கிய அறிவிப்பு
Published on: 

சென்னை,

காய்ச்சல் இருந்தால் நிலவேம்பு குடிநீரை தினம் இரண்டு வேளை காய்ச்சல் குணமாகும் வரை அருந்தலாம் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

நிலவேம்பு குடிநீர்

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் தற்போது பரவி வரும் டெங்கு மற்றும் இதர வைரஸ் காய்ச்சல்களுக்கு தற்காப்பு மருந்தாகவும், சிகிச்சை மருந்தாகவும், பயன்படுகின்ற நிலவேம்பு குடிநீர் என்பது சித்த மருத்துவ மருந்து ஆகும். காய்ச்சல் போன்ற நோய்களுக்கு இது மிகவும் பலன் தரக்கூடிய மருந்தாகும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், வட்டார அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படும் சித்த மருத்துவ பிரிவுகளில் பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் நிலவேம்பு குடிநீர் சூரணம் சுமார் 40,475 kg தயார் நிலையில் பயன்பாட்டிற்காக உள்ளது.

நிலவேம்பு குடிநீரில் நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சவேர், சந்தனம், பேய்ப்புடல், கோரைக்கிழங்கு, சுக்கு, மிளகு, பற்படாகம் ஆகிய மூலிகைகள் சம அளவில் சேர்கின்றது.

தயாரிக்கும் முறை, அளவு மற்றும் பயன்படுத்தும் முறை :

5 கிராம் நிலவேம்பு குடிநீர் சூரணத்தை, 200 மிலி தண்ணீரில் கலந்து அடுப்பில் வைத்து 50 மிலி ஆக குறையும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின்பு வடிகட்டி கஷாய குடிநீரை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

பெரியவர்களுக்கு 50 மிலி வீதமும், சிறியவர்களுக்கு 10 முதல் 15 மிலி வீதமும் உணவுக்கு முன் பயன்படுத்தலாம்.

உங்கள் பகுதியில் டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல் பரவினால் தினம் ஒருவேளை மட்டும் தற்காப்பிற்காக குடிக்க வேண்டும்.

காய்ச்சல் இருந்தால் இதனை தினம் இரண்டு வேளை காய்ச்சல் குணமாகும் வரை அருந்தலாம்.

நிலவேம்புக் குடிநீரை அவ்வப்போது தயாரித்து இளஞ்சூடாக அருந்த வேண்டும்.

எனவே, பொதுமக்கள் சம்மந்தப்பட்ட அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களிடம் உரிய ஆலோசனைகளைப் பெற்று பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com