

நீலகிரி,
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர்சோலை பகுதியில் புலிகள் மட்டுமின்றி காட்டு யானைகள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. வனத்தில் போதிய உணவு கிடைக்காத காரணத்தால் காட்டு யானைகள் விவசாய பயிர்களை தேடி ஊருக்குள் வருகிறது. இதனிடையே கோடை காலம் தொடங்கி விட்டதால் வனத்தில் உள்ள நீர் நிலைகள் வறண்டு வருகிறது. மேலும் பசுந்தீவன தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் காட்டு யானைகள் ஊருக்குள் அதிகளவு வர வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், தேவர்சோலை பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 11 மணிக்கு மாரக்கரை குடியிருப்பு பகுதியில் காட்டு யானை ஒன்று நுழைந்தது. அப்போது பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்தனர். சிறிது நேரத்தில் லீலா என்பவரது வீட்டு குழாயில் இருந்து தண்ணீர் வெளியேறும் சத்தம் கேட்டது.
இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் வீட்டு ஜன்னல்களை திறந்து வெளியே எட்டிப் பார்த்தனர். அப்போது காட்டுயானை தும்பிக்கையால் குழாயை திறந்தது. பின்னர் அதிலிருந்து வெளியேறிய தண்ணீரை குடித்து தாகம் தணித்தது. இதைக்கண்ட பொதுமக்கள் சிறிது அச்சத்துடன் இருந்தாலும் குழாயில் தும்பிக்கையை வைத்து தண்ணீரை அருந்தும் அழகான காட்சியை கண்டு ரசித்தனர். பின்னர் தங்களது வீட்டுக்குள் இருந்தபடி செல்போன்களில் யானையின் செயல்பாடுகளை எந்தவித தொந்தரவும் இன்றி வீடியோவாக பதிவு செய்தனர். தாகம் தீரும் வரை காட்டு யானை குழாயில் இருந்து வெளியேறிய தண்ணீரை அருந்திவிட்டு அங்கிருந்து மெதுவாக நடந்து சென்றது. காட்டு யானை ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று அப்பகுதி மக்கள் கூறினர்.