நீலகிரி: மசினக்குடி அருகே கரடி நடமாட்டம்

கல்லட்டி பகுதியில் ஊருக்குள் நுழைய முயன்ற கரடியை வளர்ப்பு நாய்கள் விரட்டின.
நீலகிரி,
நீலகிரி மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதி, தேயிலை தோட்டங்கள், விளைநிலங்கள் உள்ளது. வனப்பகுதிகளில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள், காட்டெருமைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. பெரும்பாலும், உணவு தேடி விளைநிலங்கள் வழியாக பொதுமக்கள் வசிக்கும் ஊருக்குள் வனவிலங்குகள் அடிக்கடி வருகிறது.
ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் கரடிகள், சிறுத்தைகள் ஊருக்குள் அடிக்கடி வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. மேலும் வளர்ப்பு பிராணிகளையும் கடித்துக் கொன்று வருகிறது. இதே போல் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் வந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. இவ்வாறு ஒவ்வொரு பகுதிகளில் வனவிலங்குகளால் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
கூடலூர் அருகே உள்ள மசினகுடி ஊராட்சி, முதுமலை புலிகள் காப்பக கரையோரம் உள்ளது. இங்கு காட்டு யானைகள், புலிகள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். இந்தநிலையில் மசினகுடி-ஊட்டி சாலையில் கல்லட்டியில் பொதுமக்கள் வீடுகள் உள்ளது. இங்கு நேற்று காலை வளர்ப்பு நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து பார்த்த போது, வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி ஒன்று ஊருக்குள் நுழைய முயன்றது.
இதை கண்ட பொதுமக்கள் அச்சமடைந்தனர். வளர்ப்பு நாய்கள் தொடர்ந்து கரடியை நோக்கி குரைத்தவாறு விரட்டியது. மேலும் கரடியும் புதரை ஒட்டி வளர்ப்பு நாய்களை எதிர்கொள்ள முடியாமல் பதுங்கி நின்றது. தொடர்ந்து வளர்ப்பு நாய்கள் எதிர்த்த படி நின்றதால், வேறு வழி இன்றி வந்த வழியாக கரடி திரும்பி சென்றது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.






