நீலகிரி: மாயாற்றில் காட்டாற்று வெள்ளம் - தெங்குமரஹடா மலைக்கிராமத்தில் போக்குவரத்து துண்டிப்பு

ஆற்றில் வெள்ளம் அபாய கட்டத்தைத் தாண்டி செந்நிறமாகப் பெருக்கெடுத்து ஓடுவதால், பரிசல் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி: மாயாற்றில் காட்டாற்று வெள்ளம் - தெங்குமரஹடா மலைக்கிராமத்தில் போக்குவரத்து துண்டிப்பு
மாயாறு
Published on: 

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அதி தீவிர கனமழை காரணமாக, மாயாற்றில் கடுமையான காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, கோத்தகிரி வட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதி கிராமமான தெங்குமரஹாடா வெளி உலகத்துடனான தொடர்பை இழந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

கனழை- காட்டாற்று வெள்ளம்

நீலகிரி மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் முதுமலை புலிகள் காப்பக எல்லையில் அமைந்துள்ள தெங்குமரஹாடா கிராம மக்கள், தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக மாயாற்றைத்தான் பரிசல் மூலம் கடக்க வேண்டியுள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அதி தீவிர கனமழை காரணமாக, இன்று (திங்கட்கிழமை) மாயாற்றில் கடுமையான காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தீவு போல மாறிய கிராமம்

ஆற்றில் வெள்ளம் அபாய கட்டத்தைத் தாண்டி செந்நிறமாகப் பெருக்கெடுத்து ஓடுவதால், பரிசல் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் உணவு, மருத்துவம் போன்ற அவசரத் தேவைகளுக்கு கூட மக்கள் வெளியே வர முடியாமல் கிராமத்திற்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

மண் சரிவுகளும் உயிரிழப்பும்

மாவட்டம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறியதும் பெரியதுமான நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, மேட்டுப்பாளையம் - குன்னூர் மலைப்பாதையில் உள்ள பர்லியாறு பகுதியில் கடந்த (வெள்ளிக்கிழமை) அன்று ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் சிக்கி, அரசுப் பேருந்து ஓட்டுநர் ஜனகராஜ் (வயது 51) பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரெயில் பாதையிலும் பல இடங்களில் மண் சரிந்து விழுந்துள்ளதால், ரெயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கைகள்

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேட்டுப்பாளையம் - குன்னூர் பாதையில் உள்ள நிலச்சரிவுகளை அகற்றும் வரை, வாகனங்கள் அனைத்தும் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.

பொதுமக்கள் அவசரத் தேவைகளுக்கு நீலகிரி மாவட்டக் கட்டுப்பாட்டு அறையை 1077 அல்லது 0423-2450024 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், நிலமை சீராகும் வரை மலைப்பாதைகளுக்கு அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com