

பந்தலூர்,
பந்தலூர் அருகே சில நாட்களுக்கு முன்பு 14 வயது சிறுவன், காட்டு யானை தாக்கி பலியானான். இதையடுத்து வனத்துறையினரை கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வேண்டும், அகழி வெட்ட வெண்டும், மின்வேலி அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விடுத்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் முதல் கட்டமாக நேற்று முன்தினம் முதல் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்கவும், அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவும் கூடலூர் மாவட்ட வன அலுவலர் தேவராஜ் உத்தரவுபடி முதுமலை புலிகள் காப்பகம் தெப்பகாடு யானைகள் முகாமில் இருந்து கிருஷ்ணா, விஜய் ஆகிய 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.