

நீலகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வனத்தில் இருந்து வரும் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இவைகள் இரை, தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிகின்றன. இதிலும் குறிப்பாக சிறுத்தைகள் வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி செல்வது வாடிக்கையாக உள்ளது.
இந்தநிலையில் கோத்தகிரியில் இருந்து நெடுகுளா செல்லும் சாலையில் இந்திரா நகர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி. நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் லட்சுமி மற்றும் 2 குழந்தைகள் உள்பட குடும்பத்தினர் 7 பேர் சாப்பிட்டுவிட்டு ஒரு அறையில் தூங்கிகொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த சிறுத்தை, லட்சுமி வீட்டின் மற்றொரு அறை கண்ணாடி ஜன்னலின் ஒரு பக்கத்தை உடைத்து சேதப்படுத்தி திறந்து உள்ளே புகுந்தது. அப்போது அங்கிருந்த வளர்ப்பு நாயான குட்டிநாயை கவ்வி கொன்று வேட்டையாடி ஜன்னல் வழியாக எடுத்து சென்றது.
முன்னதாக சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து விழித்த குடும்பத்தினர் வந்தபோது ஜன்னல் வழியாக சிறுத்தை, குட்டிநாயை கவ்வியபடி எடுத்து செல்வதை பார்த்து அதிர்ச்சியும், அச்சமும் அடைந்தனர். இவர்கள் அனைவரும் வேறொரு அறையில் தூங்கி கொண்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பு வனத்துறையினர் சிறுத்தையின் நட மாட்டத்தை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.