நீலகிரி: தனியார் எஸ்டேட்டில் படுத்து ஓய்வெடுத்த புலி: கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை

புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நீலகிரி: தனியார் எஸ்டேட்டில் படுத்து ஓய்வெடுத்த புலி: கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை
Published on

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா பகுதிகளில் வனத்தையொட்டிய சாலை, கிராமங்கள், எஸ்டேட், தோட்டங்களுக்குள் யானைகள், புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் புகுந்து அட்டகாசம் செய்வது அதிகரித்து காணப்படுகிறது.

இந்தநிலையில் கூடலூரில் இருந்து கேரள மாநிலம் சுல்தான்பத்தேரிக்கு செல்லும் சாலை நெலாக்கோட்டை பகுதியில் நேற்றுமுன்தினம் மாலை வழக்கம்போல் பொதுமக்கள் நடந்து சென்றனர். அப்போது அவர்கள் சாலையோரம் உள்ள தனியார் எஸ்டேட்டில் இருக்கும் புதர் பகுதியில் புலி ஒன்று படுத்து ஓய்வெடுப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சாலையில் வந்த வாகன ஓட்டிகளும் பார்த்து பீதியடைந்தனர். இதன்படி சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக புலி படுத்து ஓய்வெடுத்த நிலையில் பொதுமக்கள் எழுப்பிய சத்தத்தால் திடீரென எழுந்து அங்கிருந்து வேறு பகுதிக்கு சென்றது. எஸ்டேட்டில் புலி நடமாட்டம் இருப்பதை அறிந்து தொழிலாளர்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

இதுகுறித்த தகவலின் பேரில் வனத்துறையினர் தனியார் எஸ்டேட் பகுதியில் புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் புலி நடமாட்டம் தென்படவில்லை. இருப்பினும் மாலை மற்றும் இரவில் பொதுமக்கள் தனியாக நடந்து செல்லக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com