

சென்னை,
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து செல்வழகன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு, கடந்த மாதம் 29-ந்தேதி 9 மீனவர்களுடன் மீன்பிடிக்கச் சென்றது. ஆந்திர மாநிலம் நிஜாம்பட்டணம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது. புயல் காரணமாக மீன்வளத்துறை சார்பில் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து படகு உரிமையாளர் செல்வழகன், படகின் டிரைவர் சூர்யாவை செல்போனில் தொடர்புக் கொண்டு, அருகில் உள்ள மீன்பிடித் துறைமுகத்திற்குச் சென்று பாதுகாப்பாக நிறுத்துமாறு அறிவுறுத்தினார். அதன்படி விசைப்படகு ஆந்திர மாநிலம் நிஜாம்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 2-ந்தேதி இரவு டிரைவர் சூர்யா மீண்டும் படகை எடுத்துக்கொண்டு ஆந்திர மாநிலம் ராமாயப்பட்டணம் துறைமுகத்தை நோக்கி சென்றுள்ளார். அப்போது நடுக்கடலில் சென்றுகொண்டிருந்த விசைப்படகின் என்ஜின் திடீரென பழுதடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து படகின் என்ஜின் பழுதானது மற்றும் அதன் இருப்பிடம் குறித்த தகவல், நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் ஆந்திர கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வெங்கடேஷ் ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகிற்கு வாக்கி டாக்கி மூலம் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு காணாமல் போன விசைப்படகில் இருந்து எந்தவித தகவலும் வரவில்லை. மேலும், படகு தற்போது எங்கு உள்ளது என்பதும் தெரியவில்லை.
இதனால் அதில் இருந்த 9 மீனவர்களின் நிலை குறித்து கவலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து படகு உரிமையாளர் செல்வழகன், காசிமேடு மீன்வ ளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தார். இதன் அடிப்படையில் காசிமேடு மீன்வளத்துறை உதவி இயக்குநர் ஜான் பெக்கர், காணாமல் போன விசைப்படகு மற்றும் அதில் இருந்த 9 மீனவர்களையும் கண்டுபிடிக்கக் கோரி இந்திய கடலோர காவல் படைக்கு கடிதம் அனுப்பினார்.
இதைத்தொடர்ந்து இந்திய கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டர் மற்றும் கடலோர காவல் படைக்குச் சொந்த மான கப்பல் மூலம் நடுக்கடலில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். காசிமேட்டைச் சேர்ந்த 9 மீனவர்களின் நிலை என்ன என்பது குறித்து அவர்களது குடும்பத்தினர் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.