இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேர் சொந்த ஊர் திரும்பினர்

இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம், புதுக்கோட்டையை சேர்ந்த 9 மீனவர்கள் சொந்த ஊருக்கு வந்தனர்.
இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேர் சொந்த ஊர் திரும்பினர்
Published on

ராமேசுவரம்,

ராமேசுவரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியிலிருந்து கடந்த டிசம்பர் மாதம் மீன்பிடிக்கச் சென்ற 9 படகுகள் மற்றும் 56 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

அதுபோல் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 56 மீனவர்களும் கடந்த மாதம் 25-ந்தேதி விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை விமானம் மூலம் அனுப்பி வைப்பதற்கான பணிகள் நடைபெற்ற போது மீனவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அதிகமான மீனவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து மீனவர்கள் அனைவரும் அங்கு தனிமையில் தங்கவைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மறு கொரோனா பரிசோதனைக்கு பின்னர், 9 மீனவர்கள் மட்டும் இலங்கையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டு நேற்று அதிகாலை விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்து இறங்கினர். இதில் 6 பேர் ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள். 3 பேர் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்தவர்கள்.

அவர்கள் 9 பேரையும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஏற்பாட்டின்படி வாகனங்கள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மீதமுள்ள 47 மீனவர்களும் விரைவில் தமிழகம் அழைத்து வரப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com