

மதுரை,
பழனிசாமிக்கு மக்கள் மனதைப் படிக்க தெரிந்தது; எங்களுக்கு விஜய்போல நடிக்கத் தெரியவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
பழனிசாமிக்கு மக்கள் மனதை படிக்க தெரிந்தது. ஆனால் எங்களுக்கு விஜய் போல நடிக்க தெரியவில்லை. வலைதளங்களில் ரீல்ஸ் போடுவது அரசியல் அல்ல, கர்நாடக வரவேண்டாம் என அம்மாநில முதல்-மந்திரியே கூறும்படி, ஒரு முதல்-அமைச்சரை நாம் பெற்றுள்ளோம். எதுவுமே தெரியாத விஜய் முதல்-அமைச்சராகும்போது, இபிஎஸ் மீண்டும் முதல்-அமைச்சராகமாட்டாரா? ஊழல் ஒழிந்ததாக மாயையை கட்டமைக்கிறார்கள். ஆனால் ஊழல் ஒழியவில்லை. அரைவேக்காட்டுத்தனமான அணுகுமுறைதான் தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கிறது. காவிரி விவகாரத்தில் வாதத்தை எடுத்து வைக்க தவெக அரசு தவறிவிட்டது.
பொய் சொல்வதில் அமைச்சர் நிர்மல்குமார் கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். மின்சாரத்துறையில் என்ன நடக்கிறது என்பதே அமைச்சருக்கு தெரியவில்லை. 200 யூனிட் மின்சாரம் இலவசம் என அறிவித்தார்கள், அதுவும் முழுமை அடையவில்லை. மின் கட்டணம் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 40%-60% உயர்ந்துள்ளது. மின்வெட்டு நாடு முழுவதும் இருக்கிறது, மக்கள் போராடுகிறார்கள். ஆனால் தவெக மின்வாரியத்துறை அமைச்சர் ஒப்புக்கொள்ள தயாராக இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.