நிர்மலாதேவி வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மாற்ற அவசியம் இல்லை ஐகோர்ட்டு கருத்து

நிர்மலாதேவி வழக்கில் மூன்று விதமான விசாரணை நடந்துள்ளதால், சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிட அவசியம் இல்லை என்று ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
நிர்மலாதேவி வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மாற்ற அவசியம் இல்லை ஐகோர்ட்டு கருத்து
Published on

சென்னை,

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக அருப்புக்கோட்டையை சேர்ந்த பேராசிரியர் நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கிய இந்த வழக்கை பெண் டி.ஐ.ஜி. தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்கவேண்டும் என்று புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, தமிழக கவர்னரால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்தானம் குழு விசாரணை அறிக்கையை வெளியிட தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, இந்த வழக்கில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். பின்னர், நிர்மலாதேவி உள்ளிட்டோர் மீது பதிவான வழக்கில் குற்றப்பத்திரிகை கீழ் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை சரியான திசையில் நடந்து வருகிறது. அதனால், இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று அட்வகேட் வாதிட்டார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் பாலன் அரிதாஸ், பேராசிரியை நிர்மலாதேவி மீதான வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டனர். ஆனால், இதுவரை, பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின்படி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் விசாரணை நடத்தவில்லை. அப்போதுதான் இந்த விவகாரத்தில் மறைந்துள்ள பல உண்மைகள் வெளியில் வரும் என்று வாதிட்டார்.

அதற்கு நீதிபதிகள், யாருக்கோ குறி வைத்து வழக்கை தொடர்ந்து, அதை கோர்ட்டு மூலம் நிறைவேற்ற மனுதாரர் பார்க்கிறார். இந்த வழக்கைப் பொறுத்தமட்டில் சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணை, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் குழு விசாரணை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அமைத்துள்ள குழுவின் விசாரணை என்று 3 விதமான விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று கருத்து தெரிவித்தனர்.

மேலும், அதேநேரம் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடை செய்யும் சட்டத்தை அமல்படுத்தி, விசாகா கமிட்டியை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அமைத்துள்ளதா? என்பது குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் வருகிற டிசம்பர் 12-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com