நிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர் தலைமறைவு

பேராசிரியர்கள் 2 பேர் தூண்டுதலில் மாணவிகளை பாலியலுக்கு அழைத்தேன் என நிர்மலா தேவி வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் அவர்கள் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #nirmaladevi
நிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர் தலைமறைவு
Published on

விருதுநகர்

மாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததாக கைதான அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் முதல் மாடியில் வைத்து, விசாரணை அதிகாரியான சூப்பிரண்டு ராஜேஸ்வரி, உதவி அதிகாரியான துணை சூப்பிரண்டு சாஜிதா பேகம் ஆகியோர், பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தினர். இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இந்த விசாரணை நடந்தது.

பெரும்பாலான கேள்விகளுக்கு நிர்மலா தேவி மவுனத்தையே பதிலாக தந்துள்ளார். மாணவிகளிடம் யாருடைய தூண்டுதலின் பேரில் பேசினீர்கள் என கேட்டபோது, காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் கருப்பசாமி, முருகன் ஆகியோர் தான் ஆசை வார்த்தை கூறி தன்னை தூண்டியதாக தெரிவித்துள்ளார்.

அவரது வாக்குமூலத்தை போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர். இதற்கிடையில் சி.பி.சி.ஐ.டி. குழுவினரின் ஒரு தரப்பு, காமராஜர் பல்கலைக்கழகம் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டது.

பதிவாளர் மற்றும் தேர்வாணையர் அலுவலகங்களில் சோதனை நடத்திய அவர்கள், சில முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர்.

இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பேராசிரியை நிர்மலா தேவியிடம் முழுமையாக விசாரணை நடத்திய பிறகே, வழக்கின் முழு விவரம், அதில் தொடர்புடையவர்கள் பற்றி தெரியவரும்.

அவர் பல்கலைக்கழகம் வந்து சென்றபோது பதிவு செய்யப்பட்ட சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை சேகரித்து வருகிறோம். பேராசிரியை நிர்மலா தேவிக்கு வேறு யாருடன் தொடர்பு உள்ளது? என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம் என்றார்.

பேராசிரியை நிர்மலா தேவியிடம் 2-வது நாளாக இன்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். அவர் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் மதுரை அழைத்துச் செல்ல இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு முத்து சங்கரலிங்கம் தெரிவித்தார்.

பேராசிரியை நிர்மலாதேவி வாக்குமூலத்தின் அடிப்படையில், துணை பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர். ஆனால் இருவரும் தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com