கைலாசாவில் இருந்து மதுரை சித்திரை திருவிழா பக்தர்களுக்கு ஆசி வழங்கிய நித்யானந்தா

மதுரை சித்திரை திருவிழா பக்தர்களுக்கு இணையதளம் வழியாக சாமியார் நித்யானந்தா ஆசி வழங்கினார்.
கைலாசாவில் இருந்து மதுரை சித்திரை திருவிழா பக்தர்களுக்கு ஆசி வழங்கிய நித்யானந்தா
Published on

மதுரை,

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அன்றைய தினத்தில் இருந்து மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருகிறார்கள். 2 ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை திருவிழாவில் சுவாமி வீதி உலா வருவதை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு கோபுரம் அருகே சாமியார் நித்யானந்தாவின் சியாமளா பீட ஆசிரமம் இயங்கி வருகிறது. இந்த ஆசிரமம் வழியாக சுவாமி-அம்மன் வீதி உலா நடைபெறும்போது அங்குள்ள நித்யானந்தாவின் சீடர்கள் தேங்காய் உடைத்து, தீபாராதனை காண்பித்து வழிபாடு செய்கின்றனர்.

நேரடி ஒளிபரப்பு

மேலும் இந்த சித்திரை திருவிழா நிகழ்ச்சிகளை படம் பிடித்து, அவருடைய சீடர்கள் நித்யானந்தாவுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். நேரலை வாயிலாகவும் கைலாசா நாட்டில் இருந்தபடி நிகழ்ச்சிகளை அவர் பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் நித்யானந்தா, சித்திரை திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு அங்கிருந்தே ஆன்லைன் மூலம் ஆசி வழங்கி பேசி வருகிறார். அப்போது அவர் கைலாசா நாட்டில் இருந்து பேசுவதாக கூறினார். இந்த நிகழ்வுகள் அவரது ஆசிரம வளாகத்தில் வைத்துள்ள திரைகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன. திரையில் தோன்றி நித்யானந்தா பேசியபோது, அவருக்கு கீழே ஆங்கிலத்தில் மகாகைலாசா என எழுதப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com