

சென்னை,
வங்க கடலில் கடந்த 21ந்தேதி உருவாகி வலுப்பெற்ற அதி தீவிர நிவர் புயல் புயல் புதுச்சேரிக்கும்-மரக்காணத்துக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு கரையை கடந்தது. இதன்பின்னர் அந்த புயல் வடமேற்கு திசை நோக்கி நகர தொடங்கியது.
புயல் கரையை கடக்கும் போது வீசும் சூறாவளி காற்றால் காற்றாலை மின்சார நிலையங்களில் மின்சார உற்பத்தி ஏற்படுவது வழக்கம். சராசரியாக இதுபோன்ற புயல் காலங்களில் 1,500 முதல் 2 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் கிடைத்து வந்தது.
ஆனால் நிவர் புயல் வட தமிழகத்தில் கரையை கடந்தது. காற்றாலைகள் அனைத்தும் தென் மாவட்டங்களிலும், மேற்கு மாவட்டங்களிலும் இருப்பதால், வட மாவட்டங்களில் வீசிய புயல் காற்று காற்றாலைகளுக்கு பயனளிக்காமல் வீணானது.
இதனால் மின்சார வாரியத்துக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. மாறாக சேதத்தை தான் ஏற்படுத்தி சென்று உள்ளது என்று எரிசக்தி துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். நிவர் புயலால் தமிழகத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர். 3 பேர் காயமடைந்தனர்.