என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

என்.எல்.சியின் லாபம் அதிகரிக்க தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டலும் ஒரு காரணம் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: டாக்டர் ராமதாஸ்
Published on

சென்னை,

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

என்.எல்.சி நிறுவனத்தின் லாபம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் நிலையில், தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. என்.எல்.சி நிறுவனத்தின் லாபம் அதிகரிப்பதற்கு அதன் செயல்பாடுகள் காரணமல்ல மாறாக, தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதே காரணமாகும். தொழிலாளர்களின் உழைப்பை மதிக்க வேண்டிய என்.எல்.சி, அதை அங்கீகரிக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பாட்டாளி மக்கள் வழங்கிய நிலங்களை ஆதாரமாகக் கொண்டு தொடங்கப்பட்ட என்.எல்.சி நிறுவனம், இப்போது இந்தியாவின் மிகப்பெரிய நவரத்னா நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்திருக்கிறது. 2023-24ம் ஆண்டில் என்.எல்.சி நிறுவனத்தின் வரிக்கு முந்தைய லாபம் ரூ.2,787 கோடியாகவும், வரிக்கு பிந்தைய லாபம் ரூ.1,846 கோடியாகவும் அதிகரித்திருக்கிறது. நடப்பு நிதியாண்டில், ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் என்.எல்.சி நிறுவனத்தின் வருவாய் ரூ.3,376 கோடியாகவும், லாபம் ரூ.559.42 கோடியாகவும் அதிகரித்திருக்கிறது.

எந்த ஒரு நிறுவனத்தின் லாபம் அதிகரித்தாலும், அதன் பயன்கள் மனிதவளத்திற்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். ஆனால், என்.எல்.சி நிர்வாகத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது. அதிக லாபம் ஈட்டியுள்ள என்.எல்.சி நிறுவனம் அதன் தொழிலாளர்களுக்கு இயல்பாக வழங்கப்பட வேண்டிய அடிப்படை உரிமைகளைக் கூட வழங்க மறுக்கிறது. என்.எல்.சி நிறுவனம் இந்த அளவுக்கு லாபம் ஈட்டுவதற்கு காரணமாகத் திகழும் அதன் தொழிலாளர்கள் கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் குறைந்த ஊதியத்திற்கு பணியாற்றி வரும் நிலையில், அவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்குவதற்குக் கூட என்.எல்.சி நிறுவனம் மறுத்து வருவது அடிப்படை மனித உரிமைகளுக்கும், தொழிலாளர் நல விதிகளுக்கும் எதிரானது ஆகும்.

என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல், அவர்களை ஒப்பந்த ஊழியர்களாகவே வைத்திருந்து அவர்களுக்கு நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட பாதிக்கும் குறைவான ஊதியத்தை வழங்குவது, ஓய்வுக்குப் பிந்தைய உரிமைகளை வழங்க மறுப்பது, அளவுக்கு அதிகமாக வேலை வாங்குவது ஆகியவற்றின் மூலம் என்.எல்.சி நிறுவனம் பெரும் பணத்தை மிச்சம் செய்கிறது. என்.எல்.சியின் லாபம் அதிகரிக்க தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டலும் ஒரு காரணம்.

ஒப்பந்தத் தொழிலாளராக பணியில் சேரும் பலர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்தும் கூட ஒப்பந்தத் தொழிலாளராகவே ஓய்வு பெறும் அவலநிலை நிலவுகிறது. இந்த நிலைக்கு முடிவு கட்ட வேண்டும். அதற்காக ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரையும் உடனடியாக இன்ட்கோசர்வ் கூட்டுறவு சங்கத்தில் சேர்க்க வேண்டும். இன்ட்கோசர்வ் கூட்டுறவு சங்கத்தில் சேர்க்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய என்.எல்.சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com