என்.எல்.சி, கடலூர் மாவட்ட நிர்வாகத்தை எதிர்த்து பாமக முழு அடைப்பு போராட்டம் - 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்துக்கு பாமக அழைப்பு விடுத்துள்ள நிலையில் அங்கு பாதிப்பின்றி இயல்பு நிலை நிலவுகிறது.
என்.எல்.சி, கடலூர் மாவட்ட நிர்வாகத்தை எதிர்த்து பாமக முழு அடைப்பு போராட்டம் - 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
Published on

கடலூர்,

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி இந்தியா நிறுவனம் 2-வது சுரங்க விரிவாக்க பணிக்காக வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்தி இருந்தது. ஆனால் கையகப்படுத்திய நிலத்துக்கு உரிய இழப்பீடு கேட்டு கிராம மக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தினர். அப்போது சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக என்.எல்.சி உறுதி அளித்ததன் பேரில் நடந்த பேச்சுவார்த்தையில் சிலருக்கு உடன்பாடு ஏற்படவில்லை.

இந்த நிலையில் என்.எல்.சி நிறுவனம் வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரங்கள் மூலம் மண் தோண்டி எல்லை வரையறை செய்தனர். மேலும் விவசாய நிலத்தை நவீன எந்திரங்கள் உதவியுடன் சமன் செய்யும் பணியும் நடைபெற்றது. இதை கண்டித்து பொதுமக்கள் மற்றும் பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை பறித்து சொந்த மண்ணில் மக்களை அகதிகளாக்கும் என்.எல்.சி. நிர்வாகத்தின் போக்கை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் இன்று மாபெரும் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என பா.ம.க. நிறுவன தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருந்தார். இதனால் கடலூர் மாவட்டத்தில் பதற்றமான சூழல் உருவானது. அதற்கு ஏற்றாற்போல் பா.ம.க.வினர் நேற்று முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு வணிகர்கள், பேருந்து உரிமையாளர்கள் உள்ளிட்டோரிடம் துண்டு பிரசுரம் வினியோகம் செய்தனர்.

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்துக்கு பாமக அழைப்பு விடுத்துள்ள நிலையில் அங்கு பாதிப்பின்றி இயல்பு நிலை நிலவுகிறது. அங்கு 100 சதவீதம் அரசு பேருந்துகளும் 50 சதவீதம் தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் பேருந்துகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. கடைகள், சந்தையில் வியாபாரிகள் வணிகத்தில் ஈடுபடுகின்றனர்.

கடலூரில் கடைகள் திறக்கலாம், வாகனங்களை இயக்கலாம் என்று ஏற்கெனவே மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் அறிவித்துள்ள நிலையில், இன்று வியாபாரிகள் அச்சமின்றி கடையை திறக்கலாம்; கடையை மூட வற்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி தெரிவித்துள்ளார்.

முழு அடைப்பு போராட்டத்துக்கான அழைப்பையொட்டி கடலூரில் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கையாக பாமகவினர் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com