விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணிகளை தொடங்கிய என்.எல்.சி. நிர்வாகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்

35 ஜே.சி.பி. இயந்திரம் மூலம் விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணியை என்.எல்.சி. நிர்வாகம் தொடங்கியுள்ளது.
விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணிகளை தொடங்கிய என்.எல்.சி. நிர்வாகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Published on

சென்னை,

கடலூர் அருகே வளையமாதேவி கிராமத்தில், நடவு செய்யப்பட்ட விளைநிலங்களில் பயிர்களை அழித்து ஜே.சி.பி இயந்திரம் மூலம் கால்வாய் வெட்டும் பணிகளை தொடங்கிய என்.எல்.சி. நிர்வாகத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

நெய்வேலியில், தமிழக அரசு, ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அத்துமீறி, பயிரிடப்பட்டுள்ள நிலங்களை பாழ்படுத்தி வருவதாக, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழக அரசின் இந்தப் போக்கு, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இது குறித்து, நெய்வேலி என்எல்சி நிறுவனத் தலைவர் திரு. பிரசன்னகுமார் அவர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, இந்தப் பிரச்சினையில் விவசாயிகள் பாதிக்கப்படாதவாறு, சுமூகமான தீர்வு எட்டுமாறு தமிழக பாஜக சார்பாகக் கேட்டுக் கொண்டேன்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

விளைந்த பயிர்களை அழித்து என்எல்சிக்கு நிலம் எடுப்பதை, கடலூர் மாவட்ட உழவர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். உள்ளூர் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை தமிழ்நாடு அரசு நிறுத்த வேண்டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் கடலூர் அருகே வளையமாதேவி கிராமத்தில், நடவு செய்யப்பட்ட வயலில், பயிர்களை அழித்து பொக்லைன் இயந்திரம் மூலம் பணிகள் மேற்கொள்வதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

பல்வேறு இன்னல்களுக்கு இடையே விதைத்து, பயிர் செய்து அதனை காப்பாற்றி வரும் விவசாயிகளின் நிலத்தில் டிராக்டரை விட்டு பயிர்களை அழித்து அவசர, அவசரமாக விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன? விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிகளை என்எல்சி நிறுவனம் மேற்கொள்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது

வேளாண் நிலத்தில் வைரமே கிடைத்தாலும் அது தேவையில்லை, விவசாயமே முக்கியம் என்பதே விவசாயிகளின் நிலைப்பாடு. ஆகவே, உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வேளாண்மை தொழிலுக்கு பேராபத்து விளைவிக்கும் சுரங்கத்துக்கான விரிவாக்கப் பணிகளை தமிழ்நாடு அரசு மற்றும் என்எல்சி நிறுவனம் உடனே கைவிட வேண்டும்.

இவ்வாறு அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com