

சென்னை,
தி.மு.க., ஆட்சிக்காலத்தில் நகராட்சி நிர்வாகத்துறையில் 2.538 உதவி என்ஜினீயர்கள், இளநிலை என்ஜினீயர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு நடந்த நியமனங்களில் ரூ.634 கோடி வரை லஞ்சம் பெறப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டி தமிழ்நாடு டி.ஜி.பி.க்கு, அமலாக்கத்துறை இயக்குனர் கடிதம் எழுதினார். இந்த கடிதத்தின் அடிப்படையில் நகராட்சித்துறை அமைச்சராக இருந்த கே.என்.நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில், அ.தி.மு.க., எம்.பி. இன்பதுரை பொதுநலமனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, அமலாக்கத்துறை இயக்குனரின் கடிதத்தின் அடிப்படையில் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிட்டது. ஆனால், போலீசார் வழக்குப் பதிவு செய்யாததால், சென்னை ஐகோர்ட்டில் இன்பதுரை கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார். அதேபோல, இந்த வழக்கின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி அரசு தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் வருகிற 23-ந்தேதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு மூத்த வக்கீல் அரவிந்த்பாண்டியன் ஆஜராகி, "மறுஆய்வு மனு நிலுவையில் இருக்கும்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கு முன்பு (தி.மு.க., ஆட்சிக்காலத்தில்) அட்வகேட் ஜெனரலாக இருந்த பி.எஸ்.ராமன் மறுஆய்வு மனுக்கள், கோர்ட்டு அவமதிப்பு வழக்கு மனுக்கள் மீதான விசாரணைக்கு வரும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்று இந்த ஐகோர்ட்டில் ஏற்கனவே உத்தரவாதம் அளித்திருந்தார்” என்றார்.
அதற்கு நீதிபதிகள், அட்வகேட் ஜெனரல் ஏற்கனவே உத்தரவாதம் அளித்த பின்னர், போலீசார் எப்படி இதுபோல நடவடிக்கை எடுத்தனர்?" என்று கேள்வி எழுப்பினர்.
அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், "நகராட்சி பணி நியமனங்களில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை ஆதாரப்பூர்வமாக அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் முன்னாள் அமைச்சரான கே.என்.நேரு உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று (நேற்று) காலையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆனால், அந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) தற் போது என்னிடம் இல்லை. முன்னாள் அட்வகேட் ஜெனரல் இந்த ஐகோர்ட்டுக்கு அளித்த உத்தரவாதம் குறித்த விவரம் எனக்கு தெரியாது. வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்ற இந்த ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை எதுவும் இதுவரை இல்லாததால், அந்த உத்தரவின் அடிப்படையிலேயே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்” என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், "சீராய்வு மனுக்கள், கோர்ட்டு அவமதிப்பு வழக்கு ஆகியவை வருகிற 23-ந்தேதி இந்த ஐகோர்ட்டில் விசாரணைக்கு வரவுள்ளது. எனவே, லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கின் அடிப்படையில் வருகிற 23-ந்தேதி வரை மேல்நடவடிக்கை எடுக்காமல் நிறுத்தி வைப்பதால், அரசுக்கு எந்த பாதிப்பும் வரப்போவது இல்லை.
முன்னாள் அட்வகேட் ஜெனரல் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையிலும், தற்போது பதிவு செய்துள்ள வழக்கின் அடிப்படையிலும், எந்த ஒரு நபர் மீதும் வருகிற 23-ந்தேதி வரை போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது. அனைத்து வழக்குகளையும் வருகிற 23-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்" என்று உத்தரவிட்டனர்.