மறு குடியமர்த்தப்படும் குடும்பத்தினரின் குழந்தைகள் கல்வி பெற தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

மறு குடியமர்த்தப்படும் குடும்பத்தினரின் குழந்தைகள் கல்வி பெற தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மறு குடியமர்த்தப்படும் குடும்பத்தினரின் குழந்தைகள் கல்வி பெற தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

சட்ட விதிகளை பின்பற்றாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என்றும் மறு குடியமர்வு தொடர்பான அரசின் கொள்கைகள், சட்ட விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா புர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மறு குடியமர்த்தப்படும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் கல்வி பெறுவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு மனுதாரர் தரப்பில் வைக்கப்பட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்த அரசு தரப்பு, சென்னையில் கூவம் நதிக்கரையில் ஆக்கிரமித்து வசித்த 14,257 குடும்பங்களில், 13,514 குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளன . அவர்களுக்கு சட்டப்படி அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தது. அரசின் இந்த திட்டங்கள் பாராட்டத்தக்கவை என்று தெரிவித்த நீதிபதிகள், இந்தத் திட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் கல்வி உரிமைச் சட்டத்தின்படி கல்வி பெறுவது என்பது அடிப்படை உரிமை. அந்த அடிப்படையில் கல்வியை வழங்குவது அரசின் கடமை என்று தெரிவித்த நீதிபதிகள், இதுபோல மறு குடியமர்த்தப்படும் குடும்பத்தினரின் குழந்தைகள் கல்வி பெற தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com