ஜனநாயகன் படத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை-அமைச்சர் முத்துசாமி பேட்டி

ஜனநாயகன், பராசக்தி போன்ற படங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையிலும் தி.மு.க. அரசு ஈடுபட வேண்டிய தேவை இல்லை என்று முத்துசாமி கூறினார்
கோபி
ஈரோடு மாவட்டம் கோபியில் அமைச்சர் முத்துசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘ஜனநாயகன், பராசக்தி போன்ற படங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையிலும் தி.மு.க. அரசு ஈடுபட வேண்டிய தேவை இல்லை. வேண்டுமென்றே தொல்லை தரும் அரசு இது அல்ல. அது உலகத்துக்கு தெரியும்’ என்றார்.அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அமைச்சர் முத்துசாமி அளித்த பதி்ல்களும் வருமாறு:-
கேள்வி: தைப்பொங்கலுக்கு பொதுமக்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கவேண்டும் என்று பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளாரே?
பதில்: கொரோனா காலத்தில் மக்கள் அனைவரும் வீடுகளில் இருந்தபோது ரூ.5 ஆயிரம் வழங்கவேண்டும் என்று கேட்டோம். கொடுத்தார்களா? பொங்கலுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியும்.
கேள்வி: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு தெருக்கள் தோறும் மது விற்பதுதான் என்று அன்புமணி சொல்லியிருக்கிறாரே?
பதில்: அவர் எதையாவது சொல்லிக் கொண்டேதான் இருப்பார். அவர்களின் கட்சிக்குள் இருக்கிற பிரச்சினைகளை முடிப்பதே அவருக்கு மகிழ்ச்சியான விஷயம். சட்டம் ஒழுங்கு சீர்குலையவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.






