அனுமதியின்றி விளம்பர பேனர்கள் வைக்கக்கூடாது- கலெக்டர்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனுமதியின்றி விளம்பர பேனர்கள் வைக்கக்கூடாது என கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.
அனுமதியின்றி விளம்பர பேனர்கள் வைக்கக்கூடாது- கலெக்டர்
Published on

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தவிர்க்க வேண்டும்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனுமதியின்றி பேனர்கள் அச்சிடுவது மற்றும் உரிமம் இன்றி விளம்பர பதாகைகள் அமைப்பது அதிகரித்துள்ளது. அரசியல் கட்சியினர், கோவில் விழா குழுவினர், பல்வேறு வகையான சங்க அமைப்புகள், பொதுமக்கள் ஆகியோர் உரிய அனுமதியின்றி விளம்பர பதாகைகள், பேனர்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

இனி வரும் காலங்களில் தற்காலிக பேனர்கள் வைக்க விரும்புவோர் சம்மந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலரிடம் உரிய படிவத்தில் தேதி, பேனரில் இடம் பெறும் வாசகங்களை குறிப்பிட்டு அனுமதி பெற வேண்டும். அதிகபட்சமாக 6 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும். காலக்கெடு முடிந்த உடன் அனுமதி பெற்ற நபரே அகற்றிட வேண்டும். நிரந்தர விளம்பர பதாகைகள் வைக்க விரும்புவோர், உரிய படிவத்தில் உரிய வரைபடம் மற்றும் பொறியாளரின் உறுதித்தன்மை சான்று, விளம்பர பதாகை வைக்கப்படும் இடத்திற்கான நில உரிமையாளரிடம் செய்து கொண்ட ஒப்பந்த பத்திரம் ஆகியவற்றுடன் மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பித்து உரிமம் பெற வேண்டும். இந்த உரிமை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு.

நடவடிக்கை

அங்கீகாரமற்ற விளம்பரப் பதாகைகள், பேனர்கள் வைத்துள்ளவர்கள் அவற்றை வைத்தவர்களே அகற்றி கொள்ள வேண்டும். அகற்றாத பட்சத்தில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி உள்ளாட்சி துறை அலுவலர்களால் காவல் துறை பாதுகாப்புடன் அகற்றப்பட்டு, அகற்றியதற்கான கட்டணம், பேனர் வைத்தவரிடமிருந்து வசூலிக்கப்படும்.

எந்தவொரு நபரும் மாவட்ட நிர்வாகத்திடம் உரிய முன் அனுமதி பெறாமல் மாவட்டத்தின் எந்தவொரு இடத்திலும் நிரந்தர விளம்பர பலகைகள், தற்காலிக பேனர்கள் வைக்கக் கூடாது. பேனர்கள் அச்சிடுவோர் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் மட்டுமே அச்சிட வேண்டும். மீறி செயல்படுவோர் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அங்கீகாரமற்ற பேனர்களை அகற்றி மாசில்லா மாவட்டமாகவும், பாதுகாப்பான வாகன போக்குவரத்துற்கு ஏற்ற மாவட்டமாக மாற்றிட பொதுமக்கள், அரசியல் கட்சியினர், விழாக்குழுவினர் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com