

சென்னை,
சென்னையை அடுத்துள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கடந்த வாரம் பூங்கா ஊழியர்கள், விலங்குகளின் பராமரிப்பாளர்கள் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு லேசான அறிகுறிகளுடன் பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனையடுத்து கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜனவரி 17 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை பூங்கா மூடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வண்டலூர் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டு பூங்கா மூடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் 2-வது அலையின் போது வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா பாதிப்பு காரணமாக 2 சிங்கங்கள் உயிரிழந்தன. எனவே அது போன்ற பாதிப்பு மீண்டும் ஏற்படாமல் தடுப்பதற்காக பூங்கா நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக பூங்காவில் உள்ள அனைத்து விலங்குகளுக்கும் கால்நடை மருத்துவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். 11 சிங்கங்கள், 6 புலிகள், 4 சிறுத்தைகளின் கொரோனா பரிசோதனை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள பரிசோதனை மையத்திற்க்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அதன் முடிவுகள் இன்று வெளியான நிலையில், வண்டலூர் பூங்காவில் உள்ள எந்த விலங்கிற்கும் கொரோனா பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது. மேலும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் அனைத்து விலங்குகளும் முறையாக பராமரிக்கப்பட்டு, எந்த நோய்த்தொற்றும் ஏற்படாத வகையில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.