

மதுரை,
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணாவை நியமித்தது ஏன்? என்பதற்கு அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்தார்.
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை சார்ந்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் நடந்தது. இதில் அமைச்சர் நிர்மல்குமார். சு.வெங்கடேசன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
அமைச்சர் நிர்மல்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுரை மாவட்டத்தில் அனைத்து துறை வாரியான ஆய்வுக்கூட்டம் நடை பெற்றது. மதுரை மாநகராட்சியில் இப்போதுள்ள ஒப்பந்த நிறுவனம் பல முறைகேடுகளை செய்திருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அந்த நிறுவனம் மீது புகார் கொடுத்து வழக்குப்பதிவு செய்ய கூறி இருக்கிறோம்.
கழிவு மேலாண்மையை தனியாரிடம்தான் கொடுத்தாக வேண்டும். ஏற்கனவே இருக்கக்கூடிய பணியாளர்களை எந்த தொந்தரவும் செய்ய போவதில்லை. முன்பு உள்ளதையே பின்பற்ற போகிறோம்.
மதுரை மாநகராட்சி பகுதியில் சாலைகள் மோசமாக இருப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. நிறைய இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் ஆங்காங்கே தற்காலிகமாக இயங்கி வருகின்றன. தனியார் இடங்களில் இயங்கும் கொள்முதல் நிலையங்களை கண்டறிந்து அதனை அரசு இடங்களுக்கு மாற்ற இருக்கிறோம்.
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள வெங்கட நாராயணா, கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரல்ல. அவர் ஆந்திராவை சேர்ந்தவர்.
தலைவர் விஜய்க்கு பல அழுத்தங்கள் வந்தபோது உடன் இருந்தவர். தவறான நபருக்கு அப்பொறுப்பு வழங்கப்படவில்லை. அவர் டெல்லியில் இருந்து எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் எடுக்கமாட்டார். ஒருங்கிணைப்பு வேலைகள் மட்டுமே செய்ய போகிறார்.
இதுவரை அலங்காரமாக இருந்த பதவி, இன்று நம்பிக்கையுள்ள ஒருவருக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. யார்-யார் நம்பிக்கையாக இந்த அரசு அமைவதற்கு உழைத்தார்களோ அவர்கள் எல்லாம் முதல்-அமைச்சரின் ஆலோசகர்களாக இருப்பதில் என்ன தவறு?. அனைத்து பொறுப்புகளிலும் பொருத்தமானவர்கள்தான் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இஸ்லாமிய மதத்திற்கு மாறியவர்களுக்கு சலுகை கிடையாது என்ற ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக விரைவில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். அதற்கான வேலைகளை தொடங்கி விட்டோம்.
தமிழகத்தில் மின்வினியோகத்தை சரிசெய்வதற்கான எல்லா வேலைகளையும் கூடுதல் பணியாளர்களை வைத்து செய்து வருகிறோம். நிரந்தரமான தீர்வுக்கும் என்னென்ன வழிகள் உள்ளதோ அதனையும் செய்து வருகிறோம். 9 டெண்டர்களில் நடந்த முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் கொடுத்து இருக்கிறோம். விரைவாக அதிலும் வழக்குப்பதிவு செய்யப்படும். ஹார்டுடிஸ்க் விவகாரம் குறித்து சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பள்ளிக்கூட அடையாள அட்டையில் எந்த சாதிப்பெயரும் இடம்பெறப்போவதில்லை. அந்த மாதிரியான எந்த திட்டமும் கிடையாது. அமைச்சர் செங்கோட்டையன் இதுகுறித்து கூறும்போது பதற்றத்தில் வார்த்தையை தவறாக குறிப்பிட்டு உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.