மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை; விவசாயிகள் கவலை

மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம்.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை; விவசாயிகள் கவலை
Published on

மேட்டூர்,

மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம். அணையின் நீர் இருப்பை பொறுத்து ஜூன் 12-ந் தேதிக்கு முன்னதாகவோ அல்லது காலதாமதமாகவோ அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த பாசனத்தின் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போக விளைச்சலையும் சேர்த்து சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

தண்ணீர் திறப்பு

கடந்த 5 ஆண்டு காலத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது 2022-ம் ஆண்டில் குறித்த தேதிக்கு முன்னதாக மே மாதத்திலேயே டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. 2024-ம் ஆண்டு காலதாமதமாக ஜூலை மாதத்தில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. மீதமுள்ள 3 ஆண்டுகளும் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டை பொறுத்தவரை நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 79.86 அடியாக இருந்தது. அதாவது அணையின் கொள்ளளவு 41.81 டி.எம்.சி. ஆக இருந்தது. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி). அணையின் மொத்த கொள்ளளவு 93.45 டி.எம்.சி. ஆகும். இதனை ஒப்பிட்டு பார்க்கையில் அணையின் நீர் இருப்பு மொத்த கொள்ளளவில் பாதி அளவைவிட குறைவாக உள்ளது.

சாத்தியக்கூறுகள் இல்லை

இந்த நிலையில் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு குறித்த நேரத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் கிடைக்குமா? என்பதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளார்கள். தற்போது மேட்டூர் அணையில் உள்ள நீர் இருப்பை பொறுத்தவரை ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க சாத்தியக்கூறுகள் இல்லை என்றே அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் டெல்டா பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இருப்பினும் வருணபகவான் கனமழையை கொட்டி தீர்த்தால் தான் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் டெல்டா பாசன விவசாயிகள் வருணபகவான் வழிகாட்டுவாரா? என வான்மழையை எதிர்நோக்கி உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com