

சென்னை,
தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால், 6 லட்சத்து 31 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடந்தது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108 அடியாக இருந்தது. இதனால், குறுவை சாகுபடி சாத்தியமானது. ஆனால், இந்த ஆண்டு இன்று (திங்கட்கிழமை) காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79.07 அடியாக உள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு மேல் இருந்தால் தான், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறந்துவிட முடியும். கடந்த 6 ஆண்டுகளில் 2024-ம் ஆண்டு தவிர்த்து, ஏனைய காலங்களில் குறித்த நேரத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டு போதிய அளவில் தண்ணீர் இல்லாததால், உரிய நேரத்தில் தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், குறுவை சாகுபடிக்கான பரப்பளவும் கடந்த ஆண்டைவிட 50 சதவீதம் அளவுக்கு குறையும் என்று வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகள் கூறும்போது, "மேட்டூர் அணையில் இருந்து உரிய நேரமான ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்க முடியாத சூழல் இருப்பதால், இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கான இலக்கு குறைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.57 லட்சம் ஏக்கர், திருவாரூர் மாவட்டத்தில் 97 ஆயிரம் ஏக்கர், மயிலாடுதுறை மாவட்டத்தில் 87 ஆயிரம் ஏக்கர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 3 ஆயிரம் ஏக்கர் என மொத்தம் 3 லட்சத்து 44 ஆயிரம் ஏக்கர் அளவில் மட்டுமே குறுவை சாகுபடியை மேற்கொள்ள முடியும்." என்று தெரிவித்தனர்.
அதே நேரத்தில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே, அதாவது வரும் 26-ந் தேதியே தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மழை மற்றும் கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் சற்று அதிகம் பெய்தால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நடந்து 90 அடியே எட்டும்பட்சத்தில் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்க முடியும் என்று வேளாண் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆனால், இதற்கான சாத்தியம் குறைவுதான். குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டால், அடுத்து சம்பா சாகுபடிக்குத்தான் ஆகஸ்டு மாதம் 2-வது வாரத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். அதற்கு முன்பு தென்மேற்கு பருவமழையும் போதுமான அளவு கைகொடுக்க வேண்டும்.