தமிழ்நாட்டில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை-முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை என்றும், இந்தியாவில் நோயை வைத்து அரசியல் செய்யும் தலைவர் மு.க.ஸ்டாலின் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தமிழ்நாட்டில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை-முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை,

கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள், கொரோனா நோய்த் தொற்று தடுப்பு பணிகள் மற்றும் அத்திக்கடவு அவிநாசி நீரேற்றும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பிறகு வெளியே வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு இந்த அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்ற ஒரு தவறான, பொய்யான அறிக்கையை நாள்தோறும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இந்தியாவிலேயே, நோயை வைத்து அரசியல் நடத்துகிற ஒரே அரசியல் கட்சித் தலைவர், மு.க.ஸ்டாலின்தான். எங்களுடைய அ.தி.மு.க. எந்தளவிற்கு இன்றைக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

அதேவேளையில், மு.க.ஸ்டாலின், அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்களெல்லாம் சென்று நிவாரணம் கொடுக்க வேண்டும் என்ற ஒரு அறிவிப்பைத் தந்தார். எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல், அரசு அறிவித்த வழிமுறைகளைப் பின்பற்றாமல் நிவாரணங்களை வழங்கினார்கள். தொற்று ஏற்பட்டு ஒரு சட்டமன்ற உறுப்பினரையே இழந்துவிட்டோம்.

மருத்துவ நிபுணர்கள் குழு சொன்ன கருத்தைக் கேட்டிருந்தால் இன்றைக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினரை இழந்திருக்க வேண்டிய அவசியமில்லை. 90 நாட்கள் ஊரடங்கினால் வீணாக்கிவிட்டார் என்ற ஒரு தவறான செய்தியை, பொய்யான செய்தியை வெளியிட்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின். அ.தி.மு.க. அரசு 90 நாட்கள் கடுமையாகப் பணியாற்றி இருக்கிறது. அதனால்தான் இன்றைக்கு தொற்று குறைக்கப்பட்டு, உயிர்ச்சேதம் தடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டிற்குள் செல்வது பற்றி...

பதில்: முழுமையான அறிக்கை எங்களுக்கு கிடைக்கவில்லை. எங்களுக்கு கிடைத்த தகவல் கூட்டுறவு வங்கிகளெல்லாம் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் வருகிறது என்று சொல்லியிருக்கிறார்கள். முழுமையான தகவல் இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை.

கேள்வி: கொரோனா நோய் இருக்கும் இந்தச் சூழ்நிலையில், மகளிர் சுய உதவிக்குழுக் கடன்களைக் கட்டச் சொல்லி பயமுறுத்துகிறார்களே?

பதில்: யாரையும் பயமுறுத்தவில்லை. அப்படி யாருக்காவது பிரச்சினை இருந்தால், அரசு பரிசீலிக்கும்.

கேள்வி: தமிழகத்தில் கொரோனா தொற்று சமூகப் பரவல் ஆகிவிட்டதா?

பதில்: இல்லை. பாதிக்கப்பட்ட விவரங்களை தெளிவாக தெரிவித்திருக்கிறேன். சமூகப் பரவல் என்பதே கிடையாது. ஒருவருக்கு பாசிட்டிவ் கண்டறியப்பட்டால் அவரிடமிருந்து யார் யாருக்கு சென்றிருக்கிறது அப்படிதான் இருக்கிறதேயொழிய, சமூகப் பரவலே கிடையாது. சமூகப் பரவல் என்றால் ஊடகம் மற்றும் பத்திரிகை நண்பர்கள் இங்கு இருக்க முடியுமா? இவ்வளவு பேர் இங்கு இருக்க முடியுமா? சமூகப் பரவல் தமிழகத்தில் இல்லை.

கேள்வி: கோவையில் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் எப்பொழுது துவங்கும்?

பதில்: அதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்தப் பணிகள் முடிந்தவுடன், மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற்று அந்தப் பணிகள் துவங்கும்.

கேள்வி: சாத்தான்குளத்தில் நடைபெற்ற சம்பவம் போல வேறு எங்கும் நடைபெறக் கூடாதென்று நீங்கள் காவல் துறையினரிடம் ஏதாவது வலியுறுதியிருக்கின்றீர்களா?

பதில்: நிச்சயமாக டி.ஜி.பி.யிடம் இதை முழுமையாக தெரிவித்திருக்கிறோம். இது ஒரு சோதனையான நேரம், இந்த சோதனையான நேரத்தில் நம்முடைய காவல் துறை அதிகாரிகள் வியாபாரிகளிடத்திலும், பொதுமக்களிடத்திலும் கனிவாக நடந்துகொண்டு அவர்களுடைய அன்பைப் பெறவேண்டும் என்று கடுமையாக சொல்லியிருக்கின்றேன்.

கேள்வி: காவல்துறை மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படுமா?

பதில்: நேற்றையதினமே நான் அறிக்கை வெளியிட்டேன். ஊடகத்திலும், பத்திரிகையிலும் செய்தியை வெளியிட்டேன். ஏற்கனவே ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரையும் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றார்கள். சிறையில் அடைத்த பிறகு, அவர்கள் மருத்துவமனையில் இறந்திருக்கின்றார்கள்.

அதையெல்லாம் விசாரிப்பதற்காக கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது. அதோடு, மதுரை ஐகோர்ட்டு கிளை தானாக முன்வந்து இந்த வழக்கை பதிவு செய்து இந்த வழக்கு நடைபெறும் என்று அறிவித்திருக்கின்றது. மதுரை ஐகோர்ட்டு கிளையின் உத்தரவின்பேரில் கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு, பிரேத பரிசோதனை அறிக்கையை அங்கே தாக்கல் செய்வார். ஐகோர்ட்டு என்ன உத்தரவு பிறப்பிக்கின்றதோ, அந்த உத்தரவை அரசு நடைமுறைப்படுத்தும்.

கேள்வி: விடுபட்ட பகுதிகளில் அத்திக்கடவு அவிநாசி திட்டம் செயல்படுத்தப்படுமா?

பதில்: அத்திக்கடவு அவிநாசி இரண்டாவது கட்டம் அரசினுடைய பரிசீலனையில் இருந்து கொண்டிருக்கின்றது. அதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நபார்டு திட்டத்தின் மூலமாக அந்தத் திட்டத்தையும் நிறைவேற்றுவதற்கு அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com