

சென்னை,
மாமல்லபுரத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு விழாவில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் விஜய் பேசியதாவது: அரசியலுக்கு வந்ததில் இருந்து நம்மைப் பற்றி வதந்திகள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.அந்த டீம், இந்த டீம் என்று கூறுகிறார்கள். நாம் எந்த டீமும் கிடையாது; மக்களுடைய டீம். இது தெரிந்த பிறகு வேறு என்ன அவதூறு பரப்பலாம் என்று முயற்சித்தார்கள். அது வேலைக்கு ஆகவில்லை. கடைசியில், “இந்த விஜயை என்ன செய்யலாம்” என்று நினைத்து, விஜய் இந்த கூட்டணி, அந்த கூட்டணி சேரப் போகிறார் என்று பொய்யான பிரசாரம் செய்து கொண்டிருந்தார்கள்.
இதைப் பார்த்து நீங்கள் கொஞ்சம் குழப்பம் அடைந்திருப்பீர்கள்.நான் தெளிவாக ஒரு விஷயம் சொல்கிறேன்: நான் எப்போதும் மதச்சார்பற்ற கொள்கை என்ற நிலைப்பாட்டிலும், மதச்சார்பற்ற சமூகநீதி என்ற நிலைப்பாட்டிலும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். நம்முடைய தலைமையில்தான் ஆட்சி என்பதில் உறுதியாக இருக்கிறோம். முதல் மாநாட்டில் சொன்னது போல, அரசியலில் யாருடனும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். யார் என்ன அவதூறு பரப்பினாலும் தயவு செய்து அதை நம்ப வேண்டாம்.எல்லாம் வல்ல இறைவன் அருளால் நாம் நினைத்த இலக்கை நம்மால் அடைய முடியும். இஸ்லாமியர்களுக்கு ரமலான் வாழ்த்துகள்” இவ்வாறு அவர் கூறினார்.