சபாநாயகரை நீக்கக்கோரிய நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி: ஆதரவு-63, எதிர்ப்பு-154

சபாநாயகரை நீக்கக்கோரிய நம்பிக்கையில்லா தீர்மானம் மீது குரல் மற்றும் டிவிசன் என 2 முறையில் நடந்த வாக்கெடுப்பு தோல்வி அடைந்தது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
Published on

சென்னை,

ராதாபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வான அப்பாவு, கடந்த 4 ஆண்டுகளாக சபாநாயகராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், சபாநாயகர் அப்பாவுவை அந்த பதவியில் இருந்து நீக்கக்கோரும் தீர்மானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் (அ.தி.மு.க.) கடந்த ஜனவரி மாதம் கொடுத்துள்ளார். தற்போது நடக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே, அதாவது இன்று (திங்கட்கிழமை) அந்த தீர்மானத்தின் மீது விவாதிக்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை சட்டமன்ற கூட்டத்தின் தொடக்கத்தில் திருக்குறளை படித்து அவையை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்ததும், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், டாக்டர் செரியன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதன் பிறகு கேள்வி நேரம் நடைபெற்றது.

கேள்வி நேரம் முடிந்ததும் நேரமில்லா நேரமான 'ஜீரோ அவர்' எடுக்கப்பட்டது. அப்போது உதயகுமார் தனது தீர்மானத்தை உடனே வாக்கெடுப்புக்கு விடும்படி கோரினார். தீர்மானத்தை உடனே எடுத்து கொள்ளப்பட்டது. இதனால், சபாநாயகர் அப்பாவு, தனது இருக்கையில் இருந்து எழுந்து வெளியே சென்றார்.

பின்னர் துணை சபாநாயகர் பிச்சாண்டி, சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து வாக்கெடுப்பை நடத்தினார். பின்னர் அந்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி பேசினார். இந்நிலையில், இந்த தீர்மானம் மீது நடந்த விவாதத்திற்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்து பேசினார். அதன் பின்னர் குரல் வாக்கெடுப்புக்கு தீர்மானம் விடப்பட்டது.

தீர்மானத்தை ஏற்று ஆம் என்று ஒலிக்கும் மொத்த குரலையும், இல்லை என்று ஒலிக்கும் குரலையும் துணை சபாநாயகர் கணக்கிட்டு கொண்டார். இதில், இந்த தீர்மானம் தோல்வி அடைந்தது என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்நிலையில், நேரம் குறிக்கப்பட்டு அவையின் நுழைவு வாயில்கள் அடைக்கப்பட்டன. அந்த நேரத்தில் வெளியே சென்றிருந்தால், அவர் அமைச்சர் என்றாலோ அல்லது எம்.எல்.ஏ. என்றாலும் யாரும் அவைக்குள் வர முடியாது என்பது விதியாகும்.

அந்த வாக்கெடுப்பை சட்டசபை செயலாளர் நடத்தினார். தமிழக சட்டசபையில் 6 டிவிஷன்கள் உள்ளன. ஒவ்வொரு டிவிஷனிலும் உள்ள எம்.எல்.ஏ.க்களை எழுந்து நிற்க செய்து அவர்களின் வாக்குகளை சட்டசபை செயலாளர் பெற்று, அதை எண்ணி கணித்து, அதை துணை சபாநாயகரிடம், சட்டசபை செயலாளர் அளிப்பார். அதன் அடிப்படையில் தீர்மானத்தின் முடிவை துணை சபாநாயகர் அறிவிப்பார்.

இந்நிலையில், சபாநாயகரை நீக்கக்கோரிய நம்பிக்கையில்லா தீர்மானம் மீது குரல் மற்றும் டிவிசன் என 2 முறையில் நடந்த வாக்கெடுப்பு தோல்வி அடைந்தது என அறிவிக்கப்பட்டு உள்ளது. டிவிஷன் முறையில் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 63 வாக்குகளும், எதிர்ப்பு தெரிவித்து 154 வாக்குகளும் விழுந்தன.

இதனால், சபாநாயகரை நீக்கக்கோரி அ.தி.மு.க. கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு மீண்டும் சபாநாயகர் இருக்கையில் வந்தமர்ந்து, அடுத்த அலுவல்களை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்து உள்ளார். தொடர்ந்து அவர் வழக்கம்போல் அவையை வழிநடத்துவார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com