நிதி நிலைமை இக்கட்டான நிலையில் இருப்பதால் பழைய, புதிய பென்ஷன் திட்டங்கள் குறித்து முடிவு எடுக்கவில்லை

நிதி நிலைமை இக்கட்டான நிலையில் இருப்பதால் பழைய, புதிய பென்ஷன் திட்டம் குறித்து முடிவு எடுக்க முடியவில்லை என்று பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
நிதி நிலைமை இக்கட்டான நிலையில் இருப்பதால் பழைய, புதிய பென்ஷன் திட்டங்கள் குறித்து முடிவு எடுக்கவில்லை
Published on

சென்னை,

கடுமையான நிதி பற்றாக்குறையிலும், கடந்த 13-ந்தேதி முதல் பெட்ரோல் ரூ.3 குறைக்கப்பட்டு அமலுக்கு வந்தது. கடந்த 17-ந்தேதி இரவு வரை தமிழகத்தில் பெட்ரோல் விற்பனை குறித்து தெளிவான முடிவு தெரியவந்துள்ளது. கடந்த 13-ந்தேதி வரை தமிழகத்தில் 91 லட்சத்து 88 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் விற்பனையானது.

பெட்ரோல் மீதான வரியை குறைத்த 4 நாட்களில் 1 கோடியே 3 லட்சத்து 17 ஆயிரம் லிட்டர் விற்பனையாகியுள்ளது. அதன்படி கடந்த மூன்று நாட்களில் தினமும் 11.28 லட்சம் லிட்டர் விற்பனை அதிகரித்துள்ளது. தமிழக அரசு பெட்ரோல் விலையை குறைத்ததால் ஏராளமான மக்கள் பயன் பெற்றுள்ளனர்.

ஆய்வறிக்கை

மத்திய அரசு பல்வேறு துறைகளில் எடுக்கும் தகவல்களை (டேட்டா) மாநில அரசுக்கு தர வேண்டும். அதற்கான முயற்சியை எடுக்கப்போகிறோம்.

கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் 110 விதியின் கீழ் எத்தனை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, அதில் எத்தனை செயல்பாட்டுக்கு வந்துள்ளது, எதெல்லாம் கைவிடப்பட்டது, இதற்கெல்லாம் நிதி எங்கிருந்து வந்தது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தொடருக்கு முன்பாக அவையில் இந்த ஆய்வறிக்கை வைக்கப்படும்.

இக்கட்டான சூழ்நிலையில் வெள்ளை அறிக்கையில் வெளியிட்டோம். குடிநீர், சாலை, கட்டிடம் ஆகிய உள் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டுமானால் ஒரு அரசாங்கம் நிதி நிலையை சிறப்பிக்காமல் எதுவும் செய்ய முடியாது. இன்றைய சூழ்நிலையில் நிதி நிலையை திருத்த வேண்டும். 14-வது நிதிக்குழுவில் 2019-2020-ல் ரூ.2.10 லட்சம் கோடி வருமானம் இருக்கும் என கூறப்பட்ட நிலையில் ரூ.1.20 லட்சம் கோடி தான் வந்தது. ரூ.90 ஆயிரம் கோடி குறைந்து விட்டது.

ரூ.4 லட்சம் கோடி

இந்த சூழ்நிலையின் ஆழத்தை உணர்ந்து பார்க்க வேண்டும். தமிழகத்திற்கு மத்திய அரசு பரிந்துரை செய்த ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்து 450 கோடி நிதியில் ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 22 கோடி தான் வந்துள்ளது. அதிலும், ரூ.30 ஆயிரம் கோடி குறைந்து விட்டது. இதனால் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.4 லட்சம் கோடி வருவாயை நாம் இழந்துவிட்டோம்.

இதனால்தான் எல்லா அரசாங்கங்களும் சில நேரங்களில் சில செலவுகளை ஒத்தி வைத்துள்ளன. 2002-ல் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது 6 முறை அகவிலைப்படியை ஒத்திவைத்துள்ளது. நிதி இல்லாதபோது ஓரளவுக்கு மேல் சமாளிக்க முடியாது. தேவை இருக்கிற போது வரியை அதிகரிக்காமல் அரசாங்கம் நடத்த முடியாது. எல்லோருக்கும் எல்லாம் சமூக பொருளாதார நீதிக்கு ஏற்ப தான். எல்லோரும் எல்லாம் என்றால் எல்லோருக்கும் அனைத்தையும் என்றைக்குமே இலவசமாக வழங்க முடியாது. அரசாங்கம் திவாலாகி விடும். அதனால் எல்லோருக்கும் எல்லாம் சமூக பொருளாதார நீதிக்கு ஏற்ப தான்.

ஆனால் இன்றைக்கு வருத்தமளிக்கின்றது என்னவென்றால் கடைசி 10 ஆண்டுகளில் நடந்த ஆட்சி இந்த கொள்கையில் இருந்து விலகி யாரெல்லாம் எதையெல்லாம் கைப்பற்ற முடியுமோ, அதையெல்லாம் எடுத்துக்கொள்ளுங்கள் என்ற ஒரு தத்துவத்தில்தான் நடந்திருக்கிறது. இது எங்கள் கருத்துக்கு முற்றிலும் விரோதமானது. இதை மாற்றியே ஆக வேண்டும். இதை மாற்றுவது எளிய காரியமில்லை.

பழைய பென்ஷன் திட்டம்

தேவை இருக்கின்ற நேரத்தில் வரியை அதிகரிக்கவில்லை என்றால் அரசாங்கம் நடத்த முடியாது. மிக கடினமான சில பிரச்சினைகளை நாம் ஒத்திவைக்க வேண்டியுள்ளது. பழைய பென்ஷன் திட்டம், புதிய பென்ஷன் திட்டம் 18 ஆண்டுகளாக நிலுவையிலே இருந்து கொண்டிருக்கிறது. அது குறித்து இன்னும் முடிவு எடுக்காமல் 3, 4 அரசாங்கம் ஆட்சிக்கு வந்து சென்று விட்டது. அதற்கான முடிவு எடுக்க முடியவில்லை, ஏனென்றால் நிதி சூழ்நிலை இக்கட்டான நிலையில் இருக்கிறது. அதனால் முடிவு எடுக்க முடியவில்லை.

பொதுவாக விலை அதிகரிப்பதால் டி.ஏ. உயருகிறது. நிதி நிலையில் மோசமாக இருக்கிறோம். இதை வெல்வது கடினமான முயற்சி, சுலபமாக செய்ய முடியாது. நானே எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வாக இருக்கும்போது பல முறை சுட்டிக்காட்டிய பல பிரச்சினைகளை, இப்போது ஆளுங்கட்சியாக வந்து முடிவு எடுக்க முடியவில்லை என்பதே ஒரு வேதனையாக இருக்கிறது. இதையெல்லாம் அதிரடி மாற்றம் மூலம் தான் மாற்ற முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com