எத்தனை கூட்டணி வந்தாலும் த.வெ.க.வை வீழ்த்த முடியாது - நாஞ்சில் சம்பத்

கேப்டன் விஜயகாந்த் தொடங்கிய தே.மு.தி.க., தி.மு.க.விடம் அடகு வைக்கப்பட்டுள்ளது என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
எத்தனை கூட்டணி வந்தாலும் த.வெ.க.வை வீழ்த்த முடியாது - நாஞ்சில் சம்பத்
Published on

திண்டுக்கல்,

தவெக 3-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது. இதில், த.வெ.க. பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டு பேசியதாவது:-

த.வெ.க. அணைக்க முடியாத நெருப்பாக திகழ்கிறது. தமிழகத்தில் புதிய மாற்றாக தொடங்கப்பட்ட ம.தி.மு.க. தற்போது தி.மு.க.வின் காலடியில் கிடக்கிறது. கேப்டன் விஜயகாந்த் தொடங்கிய தே.மு.தி.க., தி.மு.க.விடம் அடகு வைக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் 'டார்ச் லைட் அடித்து தனது கட்சி உயிரோடு இருக்கிறதா என்று அறிவாலயத்தில் தேடுகிறார்.

ஒருவர் தேர்தல் அறிவிக்கும் முன்பே வேட்பாளர்களை அறிவித்துவிட்டு வீதியில் நிற்கிறார். ஒரு தேசிய கட்சியும், ஒரு மாநில கட்சியும் த.வெ.க.வுடன் கூட்டணிக்கு வரத்தயாராக உள்ளது. எனவே தனியாக மட்டுமின்றி அணியாகவும் வருவதற்கு தகுதி படைத்தது த.வெ.க. ஆகும்.

12 லட்சம் புதிய வாக்காளர்களின் ஆதரவு த.வெ.க.வுக்கு இருக்கிறது. முதல்-அமைச்சரின் வீட்டிலும் கூட விஜய்க்கு ஒரு ஓட்டு இருக்கிறது. எனவே எத்தனை கூட்டணி வந்தாலும் த.வெ.க.வை வீழ்த்த முடியாது. விஜய் ஆகாயம் போன்றவர். அதனால் அண்டங்காக்கைகள் அசுத்தம் செய்ய முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com