எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை கைப்பற்ற முடியாது - முதலமைச்சர் பழனிசாமி

தினகரன் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை கைப்பற்ற முடியாது என்று கிருஷ்ணகிரி பிரசாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை கைப்பற்ற முடியாது - முதலமைச்சர் பழனிசாமி
Published on

கிருஷ்ணகிரி,

தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நெருங்கி வருவதையொட்டி, அதிமுக சார்பில் வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற பெயரில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

இதன்படி தனது 5-ம் கட்டத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய முதலமைச்சர் பழனிசாமி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசிய அவர், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர்கள் கட்சிக்கு எதிராக சதித்திட்டம் தீட்டி வருகிறார்கள். சிலர் திட்டமிட்டு அதிமுகவை கைப்பற்ற முயற்சி செய்கின்றனர்.

ஒரு போதும் அவர்களை அதிமுகவில் இணைக்க முடியாது. ஒரு குடும்பம் ஆள்வதற்கு அதிமுக ஒருபோதும் தலைவணங்காது. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க முடியாது. அடிப்படை தொண்டன்தான் இனி அதிமுகவில் முதல்வராக முடியும். இது தொண்டன் ஆளுகின்ற கட்சி, உழைப்பால் உயர்ந்த கட்சி. திமுக தலைவர் ஸ்டாலின் அவதூறு பரப்பி வருகிறார். பத்தாண்டுகளாக கட்சி உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட தினகரன் இப்போது கட்சியை கைப்பற்ற சூழ்ச்சி வலையை பின்னி கொண்டிருக்கிறார். அதிமுக தொண்டர்கள் ஒற்றுமையாக இருந்து அந்த சூழ்ச்சி வலையில் சிக்கக் கூடாது. தினகரன் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை கைப்பற்ற முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட கனவை தொண்டர்கள் ஒற்றுமையாக இருந்து நிறைவேற்ற வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அரசு மருத்துவக் கல்லூரி வேண்டும் என்றார்கள். அந்தக் கோரிக்கையை நிறைவேற்றி இப்பொழுது பிரம்மாண்டமாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. எண்ணேகோல் புதூர் திட்டத்திற்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு விரைவில் அந்தத் திட்டம் நிறைவேற்றப்படும். அதேபோல பாரூர் ஏரியிலிருந்து ஊத்தங்கரையில் உள்ள முப்பது ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com