இனி திரையரங்குகளில் டிரெய்லர்கள் வெளியீடு இல்லை - திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவு

திரையரங்குகளில் இனி டிரெய்லர்கள் வெளியிடுவதில்லை என திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
இனி திரையரங்குகளில் டிரெய்லர்கள் வெளியீடு இல்லை - திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவு
Published on

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் வரும் 19-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் கடந்த 5-ந்தேதி வெளியானது. தமிழகத்தில் உள்ள பல்வேறு திரையரங்குகளிலும் 'லியோ' படத்தின் டிரைலர் திரையிடப்பட்டது.

அந்த வகையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கத்தில் 'லியோ' டிரைலரை பார்க்க வந்த ரசிகர்கள் சிலர், அங்குள்ள இருக்கைகளை உடைத்து சேதப்படுத்தினர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்த நிலையில், திரையரங்குகளில் இனி டிரெய்லர்கள் வெளியிடுவதில்லை என திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். இது குறித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாவது;-

"திரையரங்குகளில் இனி டிரைலர்களை தனியாக ஒலிபரப்ப வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். இரண்டு நிமிட காட்சிகளுக்காக இரண்டு மணி நேரம் திட்டமிட்ட வேண்டியுள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு திரையரங்க உரிமையாளர்களே பொறுப்பேற்க வேண்டியுள்ளது.

'லியோ' படத்தை தினசரி 5 காட்சிகள் திரையிட அரசு அனுமதித்ததே போதுமானது. அதிகாலை காட்சிகளில் சில சமயம் தேவையில்லாத சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படும்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com