கொசு, ஈக்களுக்கு பயப்படுகிற இயக்கம் இல்லை: எத்தனை சசிகலா வந்தாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது - அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

எத்தனை சசிகலா வந்தாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது என்றும், கொசு, ஈக்களுக்கு பயப்படுகிற இயக்கம் அ.தி.மு.க. இல்லை என்றும் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னையில் மீனவளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கொசு, ஈக்களுக்கு பயப்படுகிற இயக்கம் இல்லை: எத்தனை சசிகலா வந்தாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது - அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி
Published on

சென்னை,

கேள்வி:- சசிகலா வருகை அ.தி.மு.க.வினருக்கு ஒரு பதற்றத்தை கொடுத்திருக்கிறது. அதனால்தான் அடுத்தடுத்து புகார்கள் கொடுத்து வருகிறார்கள் என்று பேசப்படுகிறதே?

பதில்:- எங்களை பொறுத்தவரையில் டி.டி.வி.தினகரன் தான் பதற்றத்தில் இருக்கிறார். சசிகலா வெளியேவந்துவிட்டார். கண்டிப்பாக கணக்கு வழக்குகளை கேட்பார். சசிகலா பணத்தில் ஏகப்பட்ட பணத்தை அவர் கொள்ளையடித்துவிட்டார். அந்த பதற்றத்தில் அவர் இருக்கிறார். நாங்கள் ஒரு தெளிவான முடிவை எடுத்துவிட்டோம். அ.தி.மு.க.வில் சசிகலாவை இணைத்துக்கொள்ள 100 சதவீதம் வாய்ப்பே இல்லை என்று முதல்-அமைச்சர் சொல்லிவிட்டார். நாங்கள் பதற்றப்பட வேண்டிய அவசியமே இல்லை. சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் உள்பட அவர்களை சார்ந்த யாருமே இல்லாத ஒரு இயக்கமாகத் தான் அ.தி.மு.க. இருக்கும். அமைச்சர் என்ற அடிப்படையில் நாங்கள் சென்று புகார்கள் கொடுக்கவில்லை. அடிப்படை தொண்டர்கள் என்ற அடிப்படையில் தான் புகார்கள் கொடுத்திருக்கிறோம். பதவி எங்களுக்கு இரண்டாவது தான். கட்சியை காப்பாற்றுவதற்காக பதவியை துச்சமென தூக்கி எறிந்துவிட்டு கட்சிதான் முக்கியம் என்று நிற்போம்.

கேள்வி:- ஜெயலலிதாவின் உண்மை தொண்டன் என்று கூறும் நீங்கள், ஜெயலலிதாவுடன் இருந்த சசிகலாவை ஏற்க மறுப்பது ஏன்?

பதில்:- ஜெயலலிதா சசிகலாவை மீண்டும் அவருடன் இணைத்துக்கொள்ளும்போது, கட்சி விஷயத்தில் தலையிடக்கூடாது. கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. கட்சிக்கும், அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லித்தானே இணைத்தார். அப்படித்தானே அவர் இருக்க வேண்டும். அவருக்கும், கட்சிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. அதேபோல், அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்துதானே சசிகலாவின் ஆதரவை பெற்ற டி.டி.வி.தினகரன் போட்டியிட்டார். தான் வளரக்காரணமாக கட்சிக்கு, துரோகம் செய்ய நினைக்கும் இவர்களை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது. தி.மு.க.வின் பி அணியாக டி.டி.வி.தினகரன் செயல்பட்டார். ஆட்சியை கவிழ்க்க அப்போது தோல்வியடைந்த அதே பி அணியினர், சசிகலா என்ற போர்வையில் அவதாரம் எடுத்துவருகிறார்கள். எத்தனை சசிகலா வந்தாலும் சரி. அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. இந்த பி அணியினரின் அத்தனை முயற்சிகளும் தோல்வி அடையும். மீண்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

கேள்வி:- சசிகலாவை சேர்க்கக்கூடாது என்று அமைச்சர்களின் வரிசையில் நீங்கள் மட்டும்தான் சொல்லி வருகிறீர்கள். மற்ற அமைச்சர்கள் அதுபற்றி பேசாமல் இருப்பது ஏன்?

பதில்:- அ.தி.மு.க. ராணுவ கட்டுப்பாடு உள்ள கட்சி. இங்கு எல்லோரும் பேசமுடியாது. காங்கிரஸ் கட்சியில் ஆளாளுக்கு ஒரு கருத்து சொல்வார்கள். ஆனால் நாங்கள் ஒரே கருத்தாக, கட்சியின் கருத்தை முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் பல சந்தர்ப்பங்களின் சந்திக்கும்போது தெரிவிக்கின்றனர். மற்ற அமைச்சர்கள் அந்த கருத்தை சொல்லாததால், சசிகலாவுக்கு அவர்கள் ஆதரவு என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. எல்லோரும் பேச வேண்டிய அவசியம் கிடையாது. பேசுபவர்கள் பேசுவார்கள்.

கேள்வி:- முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சசிகலாவை மட்டும் ஏமாற்றவில்லை. தமிழக மக்களையே ஏமாற்றி வருகிறார் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறாரே?

பதில்:- தமிழ்நாட்டில் காமெடி நடிகர் வடிவேலு இல்லாத குறையை மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். அவர் கூறுவதை காமெடியாக பாருங்கள். தி.மு.க., சசிகலா, டி.டி.வி.தினகரன் ஒன்றாகிவிட்டார்கள். எத்தனை பேர் ஒன்றாக சேர்ந்தாலும், அ.தி.மு.க.வை அசைக்க முடியாது.

கேள்வி:- தமிழகம் வரும் சசிகலா, அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு வந்தால் உங்களுடைய எதிர்வினை என்னாவாக இருக்கும்?

பதில்:- அ.தி.மு.க. மிகப்பெரிய இயக்கம். கொசு, ஈக்களுக்கு பயப்படுகிற இயக்கம் இல்லை. சட்டத்தை நாங்கள் கையில் எடுத்துவிடக்கூடாது. சட்டத்தை மதிக்கிறோம். சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டிய போலீசிடம் புகார்தெரிவித்திருக்கிறோம். அதனை போலீஸ் பார்த்துக்கொள்வார்கள். சுப்ரீம் கோர்ட்டு சசிகலாவுக்கும், அ.தி.மு.க.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தீர்ப்பு வழங்கிவிட்டது. மக்களை ஏமாற்றும் வேலையை அவர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள். அ.தி.மு.க. பெரிய சமுத்திரம். அதில் ஒரு துளியை எடுத்துவிட்டால் சமுத்திரம் குறைந்துவிடுமா?. ஒரு சில புல்லுருவிகளால் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பு இருக்காது.

கேள்வி:- துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உங்களோடு தான் இருப்பார் என்று நம்புகிறீர்களா?

பதில்:- இதில் என்ன சந்தேகம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் அரசு பல நூற்றாண்டுகள் இருக்க வேண்டும் என்பது தான் எல்லோருடைய ஆசை. கருத்து மாறுபாடுகள் வருவதற்கு 100 சதவீதம் வாய்ப்புகள் இல்லை.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com