''35 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை பேச தேவையில்லை''

‘‘35 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை பேச தேவையில்லை’’ என்று திருநாவுக்கரசர் எம்.பி. கூறினார்.
''35 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை பேச தேவையில்லை''
Published on

புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர் எம்.பி. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் என்னை பற்றி உண்ட வீட்டிற்கு துரோகம் செய்து விட்டதாக கூறியுள்ளதாக கேட்கிறீர்கள். நான் அ.தி.மு.க.வில் இருந்த போது உண்ணவில்லை. அதனால் நான் துரோகமும் செய்யவில்லை. ஜெயலலிதா தான் எனக்கு நன்றி கடன் பட்டவர். ஜெயலலிதாவை நான் காப்பாற்றி கொண்டு வந்தததால் தான் முதல்-அமைச்சரானார். 35 ஆண்டுகளுக்கு முன்பு சட்டசபையில் நடந்த சம்பவத்தை தற்போது பேச தேவையில்லை. அப்போது நடந்ததை பார்த்தவர்களும், பார்க்காதவர்களும் பேசுகின்றனர். நான் அப்போது எதிர்க்கட்சி துணை தலைவராக இருந்த போது நடந்த சம்பவத்தை தான் சொல்லியிருக்கிறேன். தற்போது இந்த விவாதம் தேவையில்லாதது. இந்த விவகாரத்தில் வேறு மாநிலத்தில் கவர்னராக இருக்கிற தமிழிசை சவுந்தரராஜன் பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு பொருத்தமாகாது. நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கோரி வலியுறுத்தி வருகிறோம். பிற மாநிலங்கள் ஏற்றுக் கொண்ட நிலையில் ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு தர முடியாத சூழல் உள்ளது. மாணவர்களும் `நீட்' தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். `நீட்' தேர்விலும் வெற்றி பெற்று வருகின்றனர். `நீட்' தேர்வை ரத்து செய்ய நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம். துரதிர்ஷ்டவசமாக ஒரு சில சம்பவங்கள் நடப்பது வேதனை அளிக்கிறது. காவிரி பிரச்சினையில் இரு மாநில கட்சி பேசி தீர்க்க கூடியதல்ல. காவிரி பிரச்சினையில் தமிழக அரசு சட்டரீதியான தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாவட்ட அளவிலான வங்கியாளாகள் ஆய்வுக்கூட்டத்திற்கு எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சிரம்யா தலைமை தாங்கினார். கூட்டத்தில் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com