‘காலம் என்ற புள்ளியில் யாராலும் கோலம் போட முடியாது’ - குதிரை பேரம் குறித்த கேள்விக்கு செங்கோட்டையன் பதில்

15 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க.வுக்கு வருவார்கள் என யாரையும் குறிப்பிட்டு கூறவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
‘காலம் என்ற புள்ளியில் யாராலும் கோலம் போட முடியாது’ - குதிரை பேரம் குறித்த கேள்விக்கு செங்கோட்டையன் பதில்
Published on: 

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு, அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் உள்பட 6 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க.வில் இணைந்தனர். அதில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகிய இருவரும் த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளனர்.

இதனிடையே மேலும் 15 பேர் த.வெ.க.வுக்கு வர தயாராக இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் தெரிவித்திருந்தது அ.தி.மு.க.வினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரத்தை ஊக்குவிப்பதாக கூறி, தமிழ்நாடு கவர்னர் அர்லேகரிடம் அ.தி.மு.க. புகார் அளித்தது.

இந்நிலையில், அ.தி.மு.க.வின் புகார் குறித்து அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;-

“அ.தி.மு.க.வில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க.விற்கு வருவார்கள் என்பது போன்ற கருத்துகளை நான் சொல்லவில்லை. 15 பேர் வருவார்கள் என்று சொல்லியிருக்கிறேன். ஆனால் யாரையும் குறிப்பிட்டு கூறவில்லை. ஆகவே, சொல்லப்பட்ட கருத்துகள் குறித்து தெளிவாக தெரிந்து கொண்ட பிறகே புகார் மனு கொடுக்க வேண்டும்.

அதே போல், குதிரை பேரம் என்று சொன்னால், ம.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வில் இன்றைக்கு இரண்டு பேர் இணைந்திருக்கிறார்கள். அதற்குப் பெயர் என்ன? எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருக்கிற போதும் சரி, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் சரி, பல பேர் மற்ற இயக்கங்களில் இருந்து அ.தி.மு.க.வில் இணைவதும், அல்லது அ.தி.மு.க.வில் இருந்து மற்ற இயக்கங்களுக்கு சென்று இணைந்து தேர்தலை சந்திப்பதும் நடைமுறையாக இருந்திருக்கிறது.

இதில் குதிரை பேரத்திற்கு வழியில்லை. குறிப்பாக, உலகத்தை யார் வேண்டுமானாலும் வெல்ல முடியும். ஆனால் காலத்தை எவராலும் வெல்ல முடியாது. காலம் என்ற புள்ளியில் யாராலும் கோலம் போட முடியாது.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com