‘எங்கள் வேதனை, கண்ணீர் மீது யாரும் அரசியல் செய்ய வேண்டாம்’- கரூர் எம்.பி. ஜோதிமணி

மரணத்தின் விளிம்பில் இருந்து பலர் மீண்டு வந்துள்ளனர் என ஜோதிமணி எம்.பி. தெரிவித்தார்.
கரூர்,
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த துயர சம்பவம் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், படுகாயமடைந்தவர்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் சார்பில் நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை கரூர் எம்.பி. ஜோதிமணி நேரில் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறோம். மரணத்தின் விளிம்பில் இருந்து பலர் மீண்டு வந்துள்ளனர். அவர்களிடம் இன்னும் பயம் இருந்து கொண்டே இருக்கிறது. எங்கள் வலி, வேதனை, கண்ணீர் மீது யாரும் அரசியல் செய்ய வேண்டாம்” என்று தெரிவித்தார்.






