

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் முகப்பேரில் இன்று மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், எம்.பி., சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ, அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சூரஜ் எம்.என். ஹெக்டே, நிவேதித் ஆல்வா மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன :
தீர்மானம் : 1
இந்தியாவின் பாதுகாப்பை அச்சுறுத்துகின்ற வகையிலும், இறையாண்மையை தாரைவார்க்கிற முறையிலும் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர் நடந்து கொண்ட முறையை கடுமையாக விமர்சனம் செய்து, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் உரையாற்றுவதை தடுக்கும் வகையில் பா.ஜ.க.வினர் செயல்பட்டதை எவரும் மறந்திட இயலாது. இந்திய ராணுவ தலைமை தளபதியாக இருந்த ஜெனரல் எம்.எம். நரவானே ஓய்வு பெற்ற பிறகு எழுதிய புத்தகத்தில் இருந்த ஆதாரத்தின் அடிப்படையில் தான் இத்தகைய குற்றச்சாட்டுகளை தலைவர் ராகுல்காந்தி எழுப்பினார். ஆனால், அவரது உரையை பா.ஜ.க.வினர் தடுத்ததோடு, சபாநாயகரும் அனுமதி மறுத்தது அப்பட்டமான ஜனநாயக விரோத செயலாகும். இதன்மூலம் கருத்துரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய போக்கை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
தீர்மானம் : 2
அமெரிக்க அதிபரின் ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் இருதரப்பு ஒப்பந்தம் முடிவுக்கு வந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. இதன்மூலம் அமெரிக்க வரி 50 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாக குறைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், விவசாயிகளுடைய நலனை பாதிக்கின்ற வகையில்;; அமெரிக்காவுக்கு ஆதரவாக வரிவிதிப்பு சலுகைகளை வழங்கி மோடி அரசு செயல்பட்டு வருகிறது. ராகுல்காந்தி கூறியதைப் போல பாரத மாதாவை அமெரிக்காவுக்கு விற்று விட்டார் மோடி. இதற்கு பின்னணியில் அதானியின் நலனும், எப்ஸ்டின் கோப்புகளில் சிக்குண்டுவிட்ட தன்னை காப்பாற்றிக் கொள்ளும் மோடியின் சுயநலமும் மட்டுமே இருக்கின்றன. இது மக்களுக்கு நரேந்திர மோடி இழைத்த மிகப்பெரிய அநீதியாகும். இத்தகைய மக்கள் விரோத செயலை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தீர்மானம் : 3
கடந்த 12 ஆண்டுகளாக ஒன்றியத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் தொடர்ந்து நாடாளுமன்றத்திலும், பொதுவெளியிலும் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று குரல் கொடுத்து போராடி வருகிறார்கள். அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களின் பங்களிப்போடு இத்தகைய போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும். ஒன்றிய பா.ஜ.க.வின் மக்கள் விரோதப் போக்கை தோலுரித்துக் காட்டுகிற வகையில் ஆதாரப்பூர்வமான கருத்துகளுடன் தீவிரமான பரப்புரையை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமென இக்கூட்டம் முடிவு செய்கிறது.
தீர்மானம் : 4
2026 சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க.வின் வகுப்புவாத கூட்டணியை முறியடிக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது. வருகிற தேர்தலில் நாம் அமைத்துள்ள வாக்;;குச்சாவடி குழுக்களை ஒருங்கிணைத்து தேர்தல் பணியை உடனடியாக தொடங்க வேண்டும். 17.2.2026இன்படி வாக்குச்சாவடி முகவர்களாக 63,393 பேர் நியமிக்கப்பட்டதை இக்கூட்டம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது. இதற்காக உழைத்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை இக்கூட்டம் பாராட்டுகிறது. மீதமுள்ள பணிகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்துகிறது.
இத்தகைய நடவடிக்கைகளின் மூலமே தேர்தலில் நமது பங்களிப்பை உறுதி செய்ய முடியும். காங்க்pரஸ் கட்சியின் தேர்தல் வெற்றிக்கு வாக்குச்சாவடி குழுவும், கிராம காங்கிரஸ் கமிட்டியும் இணைந்து பணிகளை வேகமாக மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் : 5
சமீபத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் சட்டமன்ற நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் ஆகியோர் தங்களது கருத்துகளைத் தனிப்பட்ட முறையில் இக்கூட்டணி குறித்து தெரிவித்திருக்கிறார்கள். அதனையொட்டி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இக்கூட்டணி குறித்து பொதுவெளியிலோ, ஊடங்கங்களின் வாயிலாகவோ எவரும் எவ்விதக் கருத்தும் கூறக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியில் சிலர் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்துகிற வகையில் கருத்து கூறுவதை தவிர்த்திருக்க வேண்டும். ஆனால், கட்சி கட்டுப்பாடுகளை மீறி கருத்துகள் கூறப்படுவதால், கூட்டணி கட்சிகளிடையே இணக்கமற்ற சூழல் ஏற்பட்டு காங்கிரஸ் கட்சியின் நலன் பாதிக்கப்படும் என்று இக்கூட்டம் கருதுகிறது. எனவே, அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தலின்படி, திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து பொதுவெளியில் எவர் பேசினாலும் அவர்கள் மீது காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் : 6
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டு வெற்றிகரமான செயல்பாட்டின் மூலம் மூன்றாம் ஆண்டில் கால் பதித்து, பதவியேற்ற நாள் முதற்கொண்டு தமது கடுமையான உழைப்பின் மூலம் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 18,000 கிராம கமிட்டிகளை அமைத்து 2,00,000 நிர்வாகிகளை நியமித்து இயக்கத்திற்கு அடித்தளமும், பெருமையும் பெற்றுத் தந்த, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை இக்கூட்டம் தனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
மக்கள் விரோத பா.ஜ.க. அரசின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு எதிராக மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் மூலமாக தொடர்ந்து போராட்டங்களை நடத்தி, அதன்மூலம் மக்களிடையே ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிரான கருத்துகளை உருவாக்குவதில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறார். தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி கட்சிகளோடு சுமூகமாக உறவு கொண்டு செயல்படுவதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தனித்துவமான இடத்தை பெற்றுத் தந்திருக்கிறார்.
மேலும், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இவரது ஒருங்கிணைப்புப் பணியை இக்கூட்டம் மனதார பாராட்டுகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டதன் மூலம் தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத்துவம் அதிக அளவில் பேசப்பட்டு வருவதை இங்கு நினைவு கூர விரும்புகிறோம்.
கிராம கமிட்டி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்து தமிழ்நாட்டில் கிராமங்கள்தோறும் காங்கிரஸ் பேரியக்கத்தை பொலிவுபெறச் செய்த பெருமை நமது மாநிலத் தலைவரையே சாரும். அந்த வகையில் அனைத்து மக்களின் நன்மதிப்பை பெற்று காங்கிரஸ் கட்சியினரை ஒருங்கிணைத்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பணி சிறக்க நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.