ஆட்சியில் பங்கு குறித்து இனி யாரும் பேசமாட்டார்கள்; ஆர்.எஸ்.பாரதி

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.
ஆட்சியில் பங்கு குறித்து இனி யாரும் பேசமாட்டார்கள்; ஆர்.எஸ்.பாரதி
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதனிடையே, கூட்டணியில் திமுக, காங்கிரஸ் இடையே குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஆட்சியில் இடம் தர வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அந்த கோரிக்கையை திமுக நிராகரித்து வருகிறது. இதனால், திமுக, காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

அந்த வகையில், மதுரையில் நேற்று திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜ கண்ணப்பன், நீங்கள் இப்படி எல்லாம் இருக்காதீர்கள்... அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஆட்சியமைத்தால்தான் நல்லது என்று சொல்கிறோம். அது தவிர வேறு ஒன்றும் சொல்லவில்லை. கூட்டணி வேண்டாம் என்று சொல்ல எங்களுக்கு உரிமையில்லை. அது முதல்-அமைச்சரின் முடிவு. ஆட்சியில் பங்கு கிடையாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெளிவாக சொல்லிவிட்டார். வரும் தேர்தலில் திமுக 170 தொகுதிகளில் போட்டியிட்டு 160 தொகுதிகளில் வெற்றிபெறுவோம்’ என்றார்.

அவரது பேச்சை மேற்கோள்காட்டி காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான மாணிக்கம் தாகூர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் , 2021 யில் 173 யில் போட்டியிட்டு 133 வெற்றி .. நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வி அடைந்த இடங்களை தான். அதிகார பகிர்வு அவசியம். ஆட்சி பங்கு எங்கள் உரிமை. மக்கள் தீர்மானிப்பார்கள்.’ இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இதன் மூலம் இந்த முறை திமுகவிடம் 40 தொகுதிகளுக்குமேல் காங்கிரஸ் கேட்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆட்சியில் பங்கு என்ற நினைப்பாட்டிலும் காங்கிரஸ் தொடர்ந்து உறுதியாக உள்ளது என தெரிகிறது.

இந்நிலையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ஆட்சியில் பங்கு, கூட்டணி ஆட்சி குறித்து நாளை முதல் யாரும் பேசமாட்டார்கள், ரூ. 5 ஆயிரம் கொடுத்த பிறகு மக்களின் மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என அரசியல் கட்சிகளுக்கு தெரியும்.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது. கூட்டணி ஆட்சியை தமிழ்நாடு மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டார். ராகுல் காந்தியில் இருந்து மற்றவர்களும் அதை ஏற்றுக்கொண்டனர்.

காங்கிரசில் ராகுல் காந்தி, செல்வப்பெருந்தகை, மல்லிகார்ஜுன கார்கே கேட்டால் பதில் சொல்லலாம். எல்லோரும் கேட்டுக்கொண்டிருந்தால் அவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது

என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com