‘தி.மு.க.வுடன் போட்டியிட எந்த கட்சிக்கும் தகுதி இல்லை’ - ஓ.பன்னீர்செல்வம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாடு போற்றும் நல்லாட்சியை நடத்தியுள்ளார் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
‘தி.மு.க.வுடன் போட்டியிட எந்த கட்சிக்கும் தகுதி இல்லை’ - ஓ.பன்னீர்செல்வம்
Published on

சிவகங்கை,

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்தார். தொடர்ந்து, 20206 சட்டமன்ற தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம், பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், சிவகங்கையில் இன்று ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“கடந்த 5 ஆண்டுகளில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு நன்மை பயக்கும் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து சிறப்பான ஆட்சியை, நாடு போற்றும் நல்லாட்சியை நடத்தியுள்ளார். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்று முதல்-அமைச்சர் ஆகும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

இன்றைக்கு இருக்கின்ற அரசியல் சூழலில், தி.மு.க.வுடன் போட்டியிட எந்த கட்சிக்கும் தகுதி இல்லை. அ.தி.மு.க.வில் இருந்து அண்ணா ஆரம்பித்த தி.மு.க.வில் நான் இணைந்த பிறகு மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். அந்த மகிழ்ச்சியை நாட்டு மக்களும் என் மீது காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். அ.தி.மு.க. என்ற இயக்கமே இல்லாத சூழல்தான் இன்று இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி ஒரு சுயநலவாதி. ஒரு அரசியல் தலைவர் அனைவரும் அன்போடும், அரவணைப்போடும் வழிநடத்திச் செல்ல வேண்டும். அந்த பண்பாடு அவரிடம் இல்லை. அ.தி.மு.க.வை அவர் எங்கு அடகு வைத்துள்ளார் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். இதன் வெளிப்பாடு சட்டமன்ற தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பின் மூலம் தெரியவரும்.

நான் சாதாரண தொண்டராகத்தான் தி.மு.க.வில் இணைந்திருக்கிறேன். கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் என்ன உத்தரவிடுகிறாரோ அதன்படி தான் எனது அடுத்தகட்ட நகர்வு இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com